கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், கடலூரில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.அதன்படி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை, விருத்தாசலம் உள் ளிட்ட பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், ஶ்ரீமுஷ்ணம் பகுதி விளையாட்டு மைதானத்தில் திடீரென மின்னல் தாக்கியது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (17), பிரவீன்குமார் (16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதேப்போன்று, மங்கலம் பேட்டை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னதுரை (58) என்பவர் வயல் வேலையை முடித்து விட்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து முறையே ஶ்ரீமுஷ்ணம் மற்றும் மங்கலம் பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரணம்
மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.