tamilnadu

img

"மழை நீரை குடித்து உயிர்வாழ்கிறோம்" திகைத்து நின்ற காஷ்மீர் மாணவர்களுக்கு-  தோள் கொடுத்த சிதம்பரம் மாணவர்கள்


10க்கு 10 உள்ள அறையில் ஒரு மின்சார அடுப்பு, கையளவு குக்கர், சிறு குவளை உள்ளது. சமையல் அறையில் சில பழைய வெங்காயத்தை தவிர குடிநீர் சொம்பு உட்பட அனைத்தும் காலியாக இருந்தது. 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி  கல்வி பயிலும்  காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 40 மாணவர்கள் அண்ணாமலை நகர் பகுதியில் தனித்தனியாக வீடு எடுத்து தங்கி  கல்வி பயின்று வருகிறார்கள்.  இந்த நிலையில் ஊரடங்கால் கடந்த ஒரு வாரமாக உணவு குடிநீர் ஏதுமின்றி வெளியே சொல்ல வெட்கப்பட்டு அண்மையில் பெய்த மழைநீரை பிடித்து வைத்து குடிநீராக மூன்று நாட்களாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 
சொந்த ஊர் திரும்புவதற்கு பதிவு செய்யப்பட்ட விமானங்களும், ரயில்களும் ரத்து செய்யப்படுள்ளது. எனவே வங்கியில் இருந்த சிறு தொகையும் உடன் படிக்கும் மாணவர் ஒருவரின் மருத்துவத்திற்கு செலவழித்து விட்டார்கள். 
இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையிலும் கூட அவர்கள் உதவி கேட்க தயங்கி, பல்கலைக்கழக ஆசிரியர்களும் குடும்பத்தினரும் தங்கள் நிலையை அறிந்து வருத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதை சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திலிருந்து பல்கலைகழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஓரிடத்தில் கூடி அவர்களின் சூழ்நிலையை விளக்கியும் சிறப்பு ஏற்பாடு செய்து எங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் எனவும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.  இது பல்கலைக்கழக நிர்வாகம் வரை சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள். 
இந்த நிலையில், சிதம்பரத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர் குபேரன் சம்பந்தப்பட்ட  காஷ்மீர் மாணவர்களை நேரடியாக  சந்தித்து  ஆறுதல் கூறியதோடு எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று கூறி முதல் கட்டமாக சிதம்பரம் பகுதி நண்பர்களின் உதவியால் குடிநீர், ரொட்டி உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளனர்.
இதில் எந்த வசதியும் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள 20 பேருக்கு   பிரபாகரன், வேந்தன் சுரேசு, மயில்வாகனன், பெருமாள் உள்ளிட்ட தன்னார்வ குழுவினர் அவர்களால் முடிந்த அரிசி, காய்கறிகள், எண்ணெய், சர்க்கரை, மிளகாய்தூள், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அவரவர் தங்கியிருக்கும் இல்லங்களுக்கு சென்று வழங்கியுள்ளனர்.  
தற்போது ரம்ஜான் நோன்பு காலத்தில் உணவின்றி மிகவும் சோர்ந்து போயிருந்தும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்த அம்மாணவர்கள் சிறு உதவியை கண்டு நெகிழ்ந்து யாரோ என விட்டுவிடாமல் எங்கிருந்தோ வந்த தங்களுக்கும் நலம் விசாரித்து உதவியளித்த நமது பண்பாடு கண்டு நன்றி பெருக்கோடு தமிழில் "நன்றி" தெரிவித்துள்ளனர்.  
காஷ்மீர் மாணவர்கள் எப்படியாவது சிறப்பு ஏற்பாடு செய்து எங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு முயற்சி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இங்கே இருக்கும் வரை உணவுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காளிதாஸ்.