இலங்கை - தென் ஆப்பிரிக்கா
இடம் : செஸ்டர் லே ஸ்ட்ரீட்
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 50% 50% வாய்ப்பு
இரு அணிகளையும் ஒப்பிடுகையில் தென் ஆப்பிரிக்கா அணி சற்று பலமாக இருந்தாலும், பார்ம் பிரச்சனையால் தோல்வியில் சாதனை படைத்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் இலங்கை அணிக்கெதிரான ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான் என்றாலும் ஆறுதல் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி தொடக்கத்தில் திணறினாலும் 27-வது லீக் ஆட்டத்தில் பலமான இங்கிலாந்து அணியை வீழ்த்திய தெம்பில் களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற அதிர்ஷ்ட வாய்ப்பாவது கிடைக்கும். தோற்றால் விமான நிலையம் தான் என்பதால் வெற்றிக்காக இலங்கை அணி கடுமையாகப் போராடும். அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை அணியும், ஆறுதலுக்காக இலங்கையைப் புரட்டி எடுக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் 32-வது லீக் ஆட்டம் பரபரப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை 13% வாய்ப்பு
இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியான செஸ்டர் லே ஸ்ட்ரீட்டில் வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும் என்பதால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இருப்பினும் மேகமூட்டத்தால் வானிலை மந்தமாகக் காணப்படும்.
ஆடுகளம்
உலகக்கோப்பை தொடரில் செஸ்டர் லே ஸ்ட்ரீட் மைதானத்துக்கு இதுதான் முதல் ஆட்டம். செவ்வக வடிவில் அமைத்துள்ள இந்த மைதானத்தில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் சரிசமமாக எடுபடும். பரப்பளவில் சிறியதாக இருப்பதால் ரன் மழை பொழியலாம்.