பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 28 ஆம் தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு கோவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான், ஹைதர் அலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்குத்தான் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 3 வீரர்களை, தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். ராவல்பிண்டியில் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் போது, எந்த அறிகுறிகளும் அவர்களிடம் இருக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு 3 வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்ய உள்ள மற்ற வீரர்கள் மற்றும் அணிக் குழுவினர் கோவிட் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் மூத்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் கிலிஃப் டீகன் ஆகியோர் மட்டும் இன்னும் சோதனை செய்து கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளது.