இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷாஃபாலி வர்மா, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
கிராஸ் இஸ்லெட் நகரில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 15 வயதே ஆன இந்திய வீராங்கனை ஷாஃபாலி வர்மா தனது சர்வதேச முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டு சாதனையை ஷாஃபாலி வர்மா முறியடித்தார். இதுவரை 5 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஷாஃபாலி இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் சேர்த்தார். சச்சின் டெண்டுல்கர் 16 வயது, 213 நாட்கள் ஆனபோது தான் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது அரை சதத்தைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.