இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்
சமீபத்தில் நிறைவுபெற்ற உலகக்கோப்பை தொடருடன் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது.விண்டீஸ் தொடரைக் கருத்தில் கொண்டு பயிற்சியாளர்களின் பதவிக்காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. புதிய பயிற்சியாளர்கள் தேர்வு கடந்த ஒருமாதமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாகத் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப் படுவதாக உச்சநீதிமன்றம் நியமித்த கபில்தேவ் தலைமையிலான சிஏசி குழு அறிவித்தது. பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு போன்ற துணை பயிற்சியாளர் பணியிடங்களைத் தேர்வு செய்ய இந்திய அணியின் தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு கடந்த 19-ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தி வருகிறது. பேட்டிங் பயிற்சியாளராக 14 பேரும், பந்துவீச்சு பயிற்சியாளராக 12 பேரும், பீல்டிங் பயிற்சியாளராக 9 பேரும் விண்ணப்பித்திருந்த நிலையில், இறுதிப்பட்டியலை வியாழனன்று பிசிசிஐ வெளியிட்டது.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 பதவிகளுக்கும் தலா 3 பேர் என மொத்தம் 9 பேர் தேர்வு செய்து இறுதிகட்ட நேர்காண லுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிர்வாக இயக்குநர், பிஸியோதெரபிஸ்ட், உடல்தகுதி நிபுணர் உள்ளிட்ட இதர பிரிவுகளுக்கான இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. உடல்தகுதி நிபுணராக நிதின் பட்டேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விண்டீஸ் தொடரின் போது விளம்பர படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராமல் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த இந்திய அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் கழற்றி விடப்பட்டு புதிய மேலாளராக கிரிஷ் தோங்ரே தேர்வாகிறார். இன்னும் ஒருவார காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து பிரிவு பயிற்சியாளர்களும் தேர்வு செய்யப் பட்டு பணியில் அமருவார்கள் என ஏதிர்பார்க்கப்டுகிறது.
பேட்டிங் : விக்ரம் ராத்தோர், சஞ்சய் பாங்கர், மார்க் ராம்பிரகாஷ்
பந்துவீச்சு : பரத் அருண், பரஸ் மாம்ப்ரே, வெங்கடேஷ் பிராசத்
பீல்டிங் : ஆர்.ஸ்ரீதர், அபய் ஷர்மா, டி.திலிப்
ஆன்டிகுவா டெஸ்ட்டில் அஸ்வின் நீக்கம்
கவாஸ்கர் கொதிப்பு
விண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட்டார். இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில்,”அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவைத் தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கிறது. விண்டீஸ் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்த அஸ்வினுக்கு அணியில் இடமில்லை என்பது திகைப்படைய வைக்கிறது” எனக் கூறினார்.
சர்ச்சைக்குக் காரணம்
இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலிய அணியைப் போல பிட்சின் தன்மை அறிந்து ஆடும் லெவனை தேர்வு செய்து வருகிறது. காலநிலைக்கு ஏற்ப விண்டீஸ் மைதானங்கள் அடிக்கடி மாறுபடுவதால் வேகம், சுழல் இரண்டிற்கும் சரிசம அந்தஸ்து கிடைக்காது. அஸ்வின் ஸ்விங் செய்து சுழல் செய்வார். ஜடேஜா மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப எகிறும் வகை சுழலை கையாள்வார். இதன் காரணமாக அஸ்வின் நீக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அஸ்வின் டெஸ்ட் ஆட்டங்களில் நன்றாக பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டர் என்பதைச் சிந்திக்காமல் விஹாரியை ஆறாவது பேட்ஸ்மேனாக தேர்வு செய்தது தான் பல்வேறு வகையில் சர்ச்சை என்னும் சந்தேகப் புயலை உருவாக்கியுள்ளது.