games

img

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட் 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்க ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானது. பிசிசிஐ முதலில் ராகுல் டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னதாகவும், ஆனால் டிராவிட் மறுத்துவிட்டதாகவும், அதனையடுத்து பிசிசிஐ, அனில் கும்ப்ளே அல்லது வி.வி.எஸ். லட்சுமணை அடுத்த பயிற்சியாளராக  நியமிக்க ஆலோசித்துவருவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது, ராகுல் டிராவிட்டோடு பிசிசிஐ தலைவர் கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் டிராவிட்டுக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ராகுல் டிராவிட் 2023 உலகக்கோப்பை முடியும்வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.