tamilnadu

img

லார்ட்ஸ் பவுன்ஸர் தாக்குதல் ஸ்மித் உடல்நிலையில் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்டஸ் மைதானத்தில் புதனன்று தொடங்கியது. சுவாரஸ்யமின்றி நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் இன்னிங்ஸின் போது இங்கிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய  பவுன்ஸர் ஸ்மித்தின் பின் கழுத்தில்  முத்தமிட்டு சென்றது. நிலை குலைந்து கீழே விழுந்த ஸ்மித்  (92 ரன்கள்) தொடர்ந்து ஆட முடி யாமல் பெவிலியன் திரும்பினார். ஸ்மித்திற்கு பதிலாக லாபஸ்சாக்னே இரண்டாவது இன்னிங்ஸில் சேர்க்கப்பட்டார்.  பந்து தாக்கியதிலிருந்து அடிக்கடி தலை வலிப்பதாகக் கூறியதால் தீவிர கண்காணிப்பில் (தீவிர சிகிச்சையில் இல்லை) ஸ்மித் உள்ளார். தொடர் சிகிச்சைக்குப் பின்பு தற்போது தலை வழியில்லை என்றும் நான் தொட்டாலோ அல்லது வேறு யாராவது தொட்டாலோ வலிக்கிறது என்று கூறியுள்ளார். 

மருத்துவ அறிக்கையின் படி பிசியோதெரபி மூலம் 5-6 நாட்களுக்குள் ஸ்மித் முழு உடல் திறனை எட்டிவிடுவார் எனக் கூறப்பட்டுள்ளதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் (லீட்ஸ் - 22ஆம் தேதி) ஸ்மித் கண்டிப்பாகக் களமிறங்குவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.    நடப்பாண்டு ஆஷஸ் தொடரில் ஸ்மித் மூலம் தான் ஆஸ்திரேலிய அணி சிரமமின்றி விளையாடி வருகிறது. தற்போது காயத்தால் ஸ்மித் அவதிப்படுவதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கவலையில் ஆழ்ந்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

142 கால வரலாறு தகர்ப்பு

தலையில் காயமடைந்த வீரரின் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐசிசி புதிய விதியை கடந்த மாதம் அமல்படுத்தியது. விதியின் படி ஆட்டத்தின் நடுவே தலையில் பந்து தாக்கி காயமடைந்தவருக்குப் பதிலாக முழுநேர மாற்று வீரரை ஒரு அணி தேர்வு செய்து ஃபீல்டிங் மட்டுமல்லாது பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் தனது முழு பங்களிப்பை அளிக்க இயலும். இந்த புதிய விதியின் அடிப்படையில் களமிறங்கிய முதல் முழுநேர மாற்று வீரர் எனும் சிறப்பை ஆஸ்திரேலிய அணியின் மார்ஸ் லாபஸ்சாக்னே பெற்றார். 142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முழுநேர மாற்று வீரர் முறையில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.