இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் மழை விளையாடிய நிலையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் ஞாயிறன்று (மேற்கு இந்தியத் தீவுகள் நேரப்படி ஆட்டம் நிறைவு பெற்றது திங்களன்று) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விராட் கோலியின் (120) அசத்த லான சதத்தின் உதவியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய விண்டீஸ் அணி தொடக்கத்தில் திணறியது. சிறிது நேரம் மழை விளையாடியதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு (46) டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ரன் விகிதத்தில் (270) மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து விளையாடிய விண்டீஸ் அணி இந்திய அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் மிரட்டலான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 42 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் புதனன்று நடைபெறுகிறது.