இந்தியா-வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 493 ரன்களில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இந்தியா - வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் ஆள் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். புஜாரா 54 ரன்களும், ரகானே 86 ரன்களும் எடுத்திருந்தனர். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, ஏற்கனவே இருந்த 493 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேச அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது. 18 ரன்கள் எடுப்பதற்குள் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வங்காளதேசம் இழந்தது. உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தடுமாற்றத்துடன் வங்காளதேசம் விளையாடி வருகிறது.