நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அணியின் பிரதான வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, பண்ட், பும்ரா, ஷமி மாதிரியான வீரர்கள் விளையாடவில்லை. கேப்டன் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுகிறார். அதனால் அணியை முதல் போட்டியில் ரஹானே, கேப்டனாக வழிநடத்துகிறார்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தற்போது பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது அணியின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இளம் வீரர்கள் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். அதன் மூலம் அணியில் நிரந்தர இடத்தையும் பிடிக்கலாம். ஆனால், அணியின் பிரதான தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதால் எந்த வீரர்களைத் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறக்குவது என்ற குழப்பம் ரஹானேவுக்கு எழுந்துள்ளது.