ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 33வது ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
ஐதராபாத்தில் ஐபிஎல் போட்டியின் 33வது ஆட்டம் ஐதராபாத் அணி மற்றும் சென்னை அணி இடையே நேற்று நடந்தது. இந்த போட்டியில், சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர்.
இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அம்பத்தி ராயுடு 25 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது ஆகியோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதை அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ரன்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். இது ஐதராபாத் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி ஆகும்.