கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் காலத்தில், ஜம்மு-காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து அதிகம் அறியப்பட வில்லை. ஆனாலும், அங்குள்ள மக்களும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருப்பது குறித்து மிகவும் ஆழ்ந்த கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், அங்கே ஆட்சி நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள இந்துத்துவா பேர்வழிகளோ தற்போது யூனியன் பிரதேச மாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிற ஜம்மு-காஷ்மீரை இன்னும் சீர்குலைக்கலாம் மாற்றியமைக்கலாம் என்பதில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களைப் பொறுத்த வரை, 2019 ஆகஸ்ட்டிலிருந்தே அவர்களது உரிமைகளின் மீதான ஒடுக்குமுறை மற்றும் அடக்குமுறைகள் தணிந்திட வில்லை.
தற்போது நாடு முழுதும் பிறப்பிக்கப்பட்டுள்ள சமூக முடக்கத்திற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே ஜம்மு-காஷ்மீரில் சமூக முடக்கம் கொண்டுவரப்பட்டுவிட்டது. அங்கே ஏற்படுத்தப்பட்ட சமூக முடக்கம் என்பது எந்தவிதமான தொற்று காரணமாகவோ அல்லது சுகாதார அவசர நிலை காரணமாகவோ ஏற்படுத்தப்படவில்லை. அரச மைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் மேற்கொள்ளப்பட்ட ஓர் அரசியல் சமூக முடக்கமாகும். இதன் விளைவாக, அம்மாநிலத்தின் மாநில அந்தஸ்தும், அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அது அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தும் மோடி அரசாங்கத்தால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான கடும் தாக்குதல்கள், அரசியல் தலை வர்களும், செயற்பாட்டாளர்களும் ஆயிரக்கணக்கானோர் வீட்டுக் காவல் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டது, இணைய தள இணைப்பைத் துண்டித்ததன் மூலம் பத்திரிகை களை செயல்பட விடாமல் அடக்கி வைத்தல், பள்ளிக் கூடங்கள் மூடல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிர்மூலமாக்கியது என கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் 2020 மார்ச் 25 அன்று கொரோனா தடுப்புக்காக சமூக முடக்கம் அறி விக்கப்பட்டபோது, காஷ்மீர் மீதான மத்திய ஆட்சியாளர்க ளின் தாக்குதல் மேலும் உக்கிரம் அடைந்திருக்கிறது. நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகமோ, காஷ்மீர் அடையாளத்தை ஒழித்துக்கட்டும் வேலையிலும், அதன் அரசியல் அமைப்பையே தங்கள் வசதிக்கேற்ப மாற்றியமைப்பதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் அமைய இருக்கும் சட்டமன்றத்தின் எல்லைகளை மாற்றி அமைப்பதற்கான ஓர் அரசியல் சூழ்ச்சியுடனும், ஒரு தலையாட்டும் பொம்மைக் கட்சியை உருவாக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க வேண்டிய நிர்வாகம், மக்களின் துன்ப துயரங்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலையின்றி இருக்கிறது. ஏப்ரல் 22 வரையிலும், சோதனை செய்யப்பட்டவர்களில் 407 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்று வந்திருக்கிறது. இது மற்ற மாநிலங்களுடன் மக்கள்தொகை அடிப்படையில் ஒப்பிடும்போது, மிகவும் அதிகமாகும். தொற்றைச் சமாளிக்க சுகாதார அமைப்பு சக்தி யற்று மிகவும் பரிதாபகரமான முறையில் இருக்கிறது. 70 லட்சம் மக்கள்தொகை உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெறும் 97 வெண்டிலேட்டர்கள் மட்டுமே இருக்கின்றன.
மிக அற்பமான உதவிகள்
சமூக முடக்கக் காலத்தில் இங்கே அளிக்கப்பட்ட பொருளா தார நிவாரணமும், நாட்டின் இதர மாநிலங்களுடன் ஒப்பிடு கையில் மிகவும் அற்பமாகும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்களும், கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதியிலிருந்து கட்டுமா னத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி மட்டும் அமல் படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து எவ்வித வருமானமும் இன்றி அவதிக்குள்ளாகியிருக்கும் ஏழைக் குடும்பங்களுக்குத் தங்கள் குடும்பத்தினரைப் பேணு வதற்காக எவ்விதமான பண உதவியும் அளிக்கப்பட வில்லை.
பத்திரிகையாளர்களுக்கு குறி
இம்மாநிலத்தில் எட்டு மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட சட்டவிரோத சமூக முடக்கத்தின் காரணமாக அங்கே சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் செயல் பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். ஆப்பிள், குங்குமப்பூ உள்ளிட்ட தோட்டத் தொழிலும் சீரற்ற பருவநிலை, போக்குவரத்து இன்மை மற்றும் சந்தைப்படுத்தல் இன்மை ஆகியவற்றின் காரண மாக கடும் இழப்புகளுக்கு உள்ளானது. இப்போது கொரோ னா சமூக முடக்கம், இந்நெருக்கடியையும், இழப்புகளையும் மேலும் அதிகரித்திருக்கின்றது. எனினும், ஆட்சியாளர்கள் மக்களை ஏதேனும் ஒருவிதத்தில் அரசுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி, துன்புறுத்துவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற வாரம், மூன்று இதழாளர்கள் குறிவைக்கப் பட்டார்கள். அவர்களில் ஒருவர், மஷ்ரத் ஷஹ்ரா என்னும் புகைப்பட-இதழாளர், ஒரு பெண்மணி. இவர், சில குறிப்பி டப்படாத முகநூல் பதிவுகளுக்காக, கொரோனா யுஏபிஏ சட்டத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதரர்களுக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. காஷ்மீரில் எந்த இதழாளராவது மத்திய அரசாங்கத்தையோ அல்லது மோடி-ஷா இரட்டையரையோ விமர்சித்தால் அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு பாயும்.
மாற்றப்படும் குடியேற்ற விதிகள்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்திடும் வேலை மிகவும் ஜரூராக நடந்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில்தான் ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் மக்களின் குடியேற்ற அந்தஸ்தை மாற்றும் விதத்தில் ஏப்ரல் 1 அன்று ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
முன்பிருந்த நிலைமை என்னவென்றால், ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்கள் (domicile status) குறித்து ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம்தான் முடிவெடுக்க முடியும். அது இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அந்தஸ்தை அளிப்பதற்கு இப்போது நிர்வாக மட்டத்தி லேயே செய்துகொள்ள முடியும். இதற்கேற்ற வகையில் விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இப்போது மாற்றப்பட்டி ருக்கிற விதிகளின்படி எவரேனும் ஒருவர் அங்கே 15 ஆண்டு களுக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார் என்றால் அவர் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கோர முடியும்.
இதேபோன்று, ஒரு மத்திய அரசு ஊழியரோ அல்லது மத்திய பொதுத்துறை ஊழியரோ அங்கே பத்தாண்டுகளுக்கும் மேல் வசித்திருந்தா ரானால், அவரும் அவருடைய குழந்தைகளும் நிரந்தர வசிப்பிட அந்தஸ்திற்குத் தகுதி உடையவர்களாகிறார்கள். அந்த அறிக்கையில் நான்காம் பிரிவு வேலை வாய்ப்புகள் அந்த மாநிலத்தின் வசிப்பிட அந்தஸ்து பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறியிருக்கிறது. இதன் பொருள், மற்ற வகையினப் பணிகளுக்கு இதர மாநிலங்க ளிலிருந்து ஆட்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதாகும்.
இந்த அறிவிக்கை, ஜம்மு உட்பட அனைத்துப்பிரிவு மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பினைச் சந்தித்திருக்கிறது. எனவே, அதன்பின் இரண்டு நாட்களுக்குப்பின்னர், அனைத்து வகைப் பிரிவு அரசு ஊழியர் பணியிடங்களும் உள்ளூர் மற்றும் வசிப்பிட அந்தஸ்து உள்ளவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று விதிகள் திருத்தப்பட்டன. எனினும், இவர்கள் வசிப்பிட அந்தஸ்து தொடர்பான வரை யறையை மாற்றவில்லை. இப்புதிய சட்டத்தின்படி, ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே இருப்பவர்களும் வசிப்பிட அந் தஸ்தைப் பெறமுடியும், அரசு வேலைகளைப் பெற முடியும் மற்றும் நிலமும் வாங்க முடியும். இது, ஆர்எஸ்எஸ்/பாஜக நீண்ட காலமாக கூப்பாடு போட்டு கோரிவருவது போன்று, முன்னாள் ராணுவத்தினர் இங்கே நிலம் வாங்கி, நிரந்தரமாகத் தங்குவதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டவர்களின் கதி என்ன?
கொரோனா சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரவர்க்க-எதேச்சாதிகார ஆட்சியாளர்கள், ஜம்மு-காஷ்மீரில் ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஆட்சி செய்பவர்களைப் போன்றே நடந்துகொண்டு வருகிறார்கள். அடைப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக் கானவர்களை இதர மாநிலங்களில் உள்ள சிறைகளுக்கு- குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்க ளில் உள்ள சிறைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
கொரோனா தொற்று காரணமாக, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்றும், அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைத்திட வேண்டும் என்றும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. சென்ற மாதத்திலிருந்து, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான அடைப்புக் காவல் ஆணைகளைத் திரும்பப்பெறும் நடவ டிக்கைகள் தொடங்கின. உத்தரப்பிரதேசத்திலும், ஹரியா னாவிலும் அடைக்கப்பட்டிருந்தவர்களில் நூற்றுக்கணக்கா னவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இங்கேயும் இவர்களின் மனிதாபிமானமற்ற இழிநிலை நன்கு தெரிந்தது. உத்தரப்பிரதேசத்தில், சிறையிலிருந்து விடுவிக்கப்படுப வர்களிடம், அவர்களின் குடும்பத்தார் நேரில் வந்து அவர்களை காஷ்மீருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
காஷ்மீரிலிருந்து சாலை வழியே உத்தரப்பிரதேசத்திற்கு வந்து, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தங்கள் உறவினர்களை விடுவித்துத் திரும்பவும் அழைத்துச் செல்வதில் ஏராள மான சிரமங்களுக்கு எண்ணற்ற குடும்பத்தினர் ஆளாகி யிருக்கின்றனர். மாநிலங்களுக்கிடையிலான கெடுபிடி களை அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. அத்துடன் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதில் ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருந்தது. காஷ்மீர் மக்களை தொலை தூர சிறைகளில் அடைத்தது அரசுதான்; அவர்கள் விடு விக்கப்படும்போது அவர்களை கைது செய்த இடத்தில் கொண்டுபோய் விடுவதும் அரசின் பொறுப்பே ஆகும். ஆனால், அப்படிச் செய்திடவில்லை. மேலும், சிறைப் படுத்தப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படவில்லை. இதன் மூலம் கொரோனா தொற்று பரவும் ஆபத்தினை அவர்கள் பெற்றிருக்கின்றனர்.
வெடிக்கும் தீவிரவாதம்
அதே சமயத்தில், காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைக ளும், தாக்குதல்களும் திடீரென வெடித்திருக்கின்றன. அனைத்து ஜனநாயக உரிமைகளும் கொடூரமான முறை யில் நசுக்கப்பட்டள்ள நிலையில் இது எதிர்பார்க்கக்கூடியது தான். எவ்விதமான அரசியல் செயல்முறையோ அல்லது ஜன நாயக நடவடிக்கைகளோ இல்லாத நிலையில், இவ்வாறு வன்முறை மற்றும் எதிர்-வன்முறை என்னும் ஒரு விஷ வட்டம் உருவாகி சாமானிய மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. சுருங்கச் சொன்னால், காஷ்மீர் மக்கள், கொரோனா வைரஸ் மற்றும் ஜனநாயக அடக்கு முறை என்று தங்களைப் பீடித்துள்ள இருவிதமான கொள்ளை நோய்களையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
(ஏப்ரல் 22, 2020)
தமிழில்: ச.வீரமணி