கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து யாரையான் சோமேஷ் (வயது 18) என்ற ஆந்திராவைச் சேர்ந்த மீனவ இளைஞர், எந்திர படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றபோது குஜராத்தின் வெரவாலின் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் மாட்டிக்கொண்டார். அவர் சென்ற கலத்திலிருந்ததோ (படகு) 500 லிட்டர் தண்ணீர்தான். அதில் அவருக்கு அவருடைய முதலாளியினால் நாளொன்று 8 லிட்டர் தண்ணீர்தான் அளிக்கப்பட்டிருந்தது. அவருடன் மற்ற மீனவர்கள் 50பேர் கலத்தில் இருந்தனர். ஒரு நாள் முழுவதும் அவருடைய அனைத்து தேவைகளுக்கும் அந்த 8 லிட்டர் தண்ணீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். உணவும், முதலாளி அளிக்கும் குறிப்பிட்ட அளவு அரிசிதான் சேமிப்பாக இருந்தது.
சோமேஷ் போன்று ஏறத்தாழ பல்வேறு கடற்கரை மாநிலங்களைச் சேர்ந்த 15,000 மீனவத் தொழிலாளர்கள் ஊரடங்குக்கு முன்னதாக மீன்பிடிக்கச் சென்றவர்கள் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு தத்தளிப்பதாக மீனவ சங்கங்கள் தெரிவித்தன.
புலம் பெயர்ந்து தொழிலாளர்களின் துயரம் போன்றே மீனவர்கள் நிலையும் நாட்டின் எந்த சட்டங்களாலும் காப்பாற்றப்படாத மிகப் பரிதாப நிலை.உள்ளூர் மீன்பிடித் தொழிலாளர்களை பற்றியே கவலைப்படாத போது, புலம் பெயர்ந்த மீனவர்கள் பற்றிக் கவலைப்பட யார்உள்ளார்கள்?
காலம் காலமாக பிழைப்பிற்காக நாடு விட்டு நாடும், மாநிலமும் விட்டு மாநிலம் செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருநூற்றாண்டாக நடந்து வரும் புலம் பெயர்வு,உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது. கடந்த 2001-லிருந்து 2011 வரை கிராமங்களிலுள்ள மக்கள் தொகை குறைந்து நகரங்களிலுள்ள மக்கள் தொகை கூடியிருக்கிறது. 2001-ல்309 மில்லியனாக இருந்தது 2011-ல் அதிலிருந்து38 விழுக்காடு அதாவது 450 மில்லியனாக அதிகரித்துள்ளதாக புலம் பெயர்ந்தவர்கள் தொடர் பான ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைக்கு காரணம் கிராமப்புறங்களில் விவசாயம் வீழ்ந்து விட்டதே காரணமாகும். அதனைத் தொடர்ந்து உள்ளூர் நீர்வளங்கள் வற்றிவிட்டதால் மீன்பிடிப்பும் குறைந்து விட்டது. அத்தோடு உள்ளூர் கைவினைத் தொழில்கள் அழிந்துவிட்டன, பல கடற்கரைகளில் மீன்வளங்கள் இல்லாததால் பிழைப்பு தேடிப் பல நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் செல்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புலம் பெயர்வில் மூன்று வகையினர் உண்டு.
மூன்று வகை மீன்பிடித் தொழிலாளர்கள்
இந்த மூன்று வகையில் அனைத்து கடலோரமாவட்டங்களின் மீனவர்களும் அடங்குவர். கடற்கரை மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களிலிருந்தும் ஒரு வாழ்வாதாரமாகக் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடிப்புக்குச் செல்பவர்களும் உண்டு. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் தமிழகம்உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வழக்கம் உண்டு.முதல் வகையினராக ஒரு ஊரிலிருந்து இன்னொருஊருக்குப் பிழைப்பிற்காகவும் அல்லது மீன்பிடிப்பில் கூலி வேலை செய்யவும் செல்கின்றனர். பின்னர் அங்கேயே தங்கி விடுபவர்களும் உள்ளனர். இரண்டாவது வகையினர் ஒரு குறிப்பிட்ட மீன்பிடி சீசனில் மேற்கு கடற்கரை மாவட்டங்களிலிருந்தும் (ஆந்திராவிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும் குஜராத்திலிருந்தும் அதேபோல உத்தரப்பிரதேசத்திலிருந்தும் பீகாரிலிருந்தும்) பல கடற்கரை மாவட்டங்களுக்கும் பலநாடுகளுக்கும் செல்வதுண்டு. சீசன் முடிந்தவுடன் திரும்பி விடுவதுண்டு. மூன்றாவது ரகத்தினர்,தொடர்ந்து போய்க் கொண்டே இருப்பார்கள். இவர்கள் குறித்து எந்த தகவலும் அரசிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.சில மீனவ சங்கங்களிடமிருந்து கிடைத்த தகவல்களிலிருந்தே நாம் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆண்டுக்கு ரூ.1.75 லட்சம் கோடி வருமானம்
நாட்டில் 1.6 கோடிப் பேர் மீன்பிடித் தொழிலைதங்களது வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்துள்ளதாக இந்திய அரசின் மீன்வளத்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 2017-2018ல் மீன்பிடிப்பிலிருந்து 1.75 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. (நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் அறிவித்த நிவாரண நிதித்தொகையும் இதே அளவு தொகைதான் என்பது குறிப்பிடத்தக்கது). ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாய் 2017-2018ல்45,106 கோடி ரூபாயும் 2018-2019ல் 46,600 கோடியும்
அந்நியச் செலாவணியாகக் கிடைத்தது.மார்ச் 24 அன்று 4 மணி நேர அவகாசத்தில் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டனர். நாம் கட்டுரையின் துவக்கத்தில் பார்த்த சோமேஷ் போன்று15,000 பேர் மேற்கு கடலில் தத்தளித்தனர். இவர்கள் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட ஆந்திர மாநில மீனவ அமைப்புகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர். இது போன்று ஆந்திராவிலிருந்தும் மகாராஷ்டிராவிலிருந்தும் குஜராத்திற்குச் சென்றவர்கள் பலர்.(ஆண்டுக்கு 25,000 பேர் வரை செல்கின்றனர்) இதில் பலர் இராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் மாட்டிக் கொண்ட 750 மீனவர்களும் உள்ளடங்குவர்.
கடலில் கொட்டப்பட்ட மீன்கள்
பல மாநிலங்களில் பிடித்து வரப்பட்ட மீன்கள்போக்குவரத்திற்கு வழியின்றியும், வாங்குவோர் இன்றியும் கடலில் கொட்டப்பட்டன. மகாராஷ்டிரத்தில் மார்ச் மாதத்தில் 10,000 டன்மீன்கள் போக்குவரத்திற்கும் ஐஸ் கிடங்கில் சேமிப்பதற்கும் வழியின்றி கடலில் கொட்டப்பட் டன. பல நாடுகள் கொரோனா பயத்தினால் மீன்களை இறக்குமதி செய்ய மறுத்து விட்டன. அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டன. மக்களிடம் ஊரடங்கினால் பணப்புழக்கம் இல்லை.அதனால் வாங்கும் சக்தியும் இல்லாததால் மீன்களுக்குச் சந்தை இல்லை. சந்தை இல்லாததால் மீனவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டனர். இன்னும் அதிலிருந்து மீண்டபாடில்லை. கொரோனாவைத் தொடர்ந்தஊரடங்கினால் மீன்துறையில் நாளொன்றுக்கு ரூ.223 கோடி நட்டமானது. இதில் எந்திரப்படகு உரிமையாளர்களுக்கு 197 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. சிறுவீத மீன்பிடியாளர்களுக்கு நாளொன்றுக்கு 27 கோடி நட்டமாகி வருகின்றது. இதிலிருந்து இவர்கள் மீள முடியுமா என்று தெரியவில்லை.
‘இந்தியா ஸ்பெண்ட்’ என்ற இணையதள செய்தி ஏட்டில் வெளியிடப்பட்டுள்ள, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தகவல், சிறுவீத மீன்பிடியாளர்கள் உலகெங்கிலும் 90 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இது தொடக்க நிலை அறிக்கை என்றும்அதுவே வெளியிடப்பட அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.மீன்வளத்துறையின் மதிப்பீட்டின்படி மீன்பிடித் தொழிலில் உள்ள மீனவர்களில் 8,18,000பேர் வறுமைக்கோட்டிற்குள் உள்ளதாகக் கூறுகிறது. இதில் 6,00,000 பேர் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என கூறுகிறது. இதில் தமிழ்நாட்டில் 1,83,000 பேரும் ஆந்திராவில் 1,50,000பேரும் வறுமைக்கோட்டிற்குள் உள்ளதாகவும் அவர்களின் நிலைமை, தொடர்ந்த ஊரடங்கினால் மிக மோசமடையும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
தலைச்சுமடு பெண்கள் பாதிப்பு
ஏற்கனவே ஊரடங்கினால் மீனவப் பெண்களின் தலைச்சுமடு வியாபாரம் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. அரசு கொடுத்த நிவாரணங்கள் வந்து சேரவில்லை. மீனவப் பெண்கள், மொத்த மீனவர்களில் 55 லட்சம் பேர் உள்ளனர். மீன் வியாபாரமே பல மாநிலங்களில் இல்லை. ஏனெனில் சந்தைகளும் இல்லை, உணவு விடுதிகளும் இல்லை. ஏற்கனவே அசாமிலும் மேற்கு வங்கத்திலும் ஊரடங்கைப் பயன்படுத்தி கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆன்லைனில்மீன் விற்பனை தொடங்கி விட்டது. நடுத்தர வர்க்கத்தினரும் உயர்தர வர்க்கத்தினரும் இதைநோக்கி நகர்வார்கள் என்பதும் நாடு முழுவதும்இது பரவும் வாய்ப்புண்டு என்பதும் மறுப்பதிற் கில்லை.மீனவர்கள், அமைப்பு சாராத தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் குறித்த தகவல்கள்மிகக்குறைவாகவே உள்ளன. அரசிடம் எந்த நடவடிக்கையும் கோர முடியாத நிலை. ஏற்கனவே கடலில் காணாமல் போனவர்களைப் பற்றிக்கண்டு கொள்வதில்லை. அவர்கள் சுடப்பட்டாலும் அதைத் தடுக்கவோ, எந்த நிவாரணமும் கோரவோ முடியாத நிலை. இந்த நிலையில் தொடர்ந்த ஊரடங்கு மீனவர்களை மோசமான மீள முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது.
===மெய்.சேதுராமலிங்கம். (மூத்த பத்திரிக்கையாளர்)===