tamilnadu

img

கோவை: லஞ்ச வழக்கில் கைதான பெண் தாசில்தார் பணியிடை நீக்கம்

கோவையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

கோவை நாயக்கன்பாளையம் ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் சின்னராஜ்(வயது 61). பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான கடை ஏலத்தில் கலந்து கொள்வதற்காக இவருக்கு பொருளாதார நிலை சான்று தேவைப்பட்டது.  

இதையடுத்து அவர் ரூ.5 லட்சத்திற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்து இருந்தார். அவரது விண்ணப்பத்தை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஏற்று ஜன.13ல் ஒப்புதல் அளித்து விட்டனர். ஆனால் சான்றிதழ் வழங்க வேண்டிய கோவை வடக்கு தாசில்தார் கோகிலா மணியை அணுகி சான்றிதழ் வழங்கும்படி கேட்டார். அப்போது தாசில்தார் ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவதாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சின்னராஜ் புகார் அளித்தார். அதனைதொடர்ந்து போலீசார் அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 25 ரூபாயை சின்னராஜ் தாசில்தாரிடம் நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக சிக்கிய  தாசில்தார் கோகிலா மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.    

மேலும் கைது செய்யப்பட்ட தாசில்தார் கோகிலா மணி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.