tamilnadu

img

எங்கு இருக்கிறோம், அடுத்து என்னவாக போகிறோம் என்றே  தெரியவில்லை கோவை தொழிற்துறையினர் வேதனை

கோவை, ஏப்.17 - 
ரிசர்வ் வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்படியும், கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுமான தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க வேண்டும் என கோவை தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் கோப்மா, சேம்பர் ஆப் காமர்ஸ், டேக்ட் உள்ளிட்ட 17 தொழிற்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் கொடிசியா தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது : 

கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை தொழில்துறையினர் வரவேற்கிறோம். மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்ற சூழ்நிலை உருவான பிறகு தான் தொழில் துவங்க தயாராக உள்ளோம். 

அதே நேரம், கோவையில் தொழில்துறையினரை பொறுத்தவரையில் தற்போது எங்கு இருக்கிறோம், அடுத்த என்னவாக போகிறோம் எனபதே தெரியவில்லை. எம்.எஸ்.எம்.இ  அதாவது சிறு,குறு தொழில்களை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு அறிவிப்பும் மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கவில்லை.  இ.எம்.ஐ 3 மாதம் காலம் ஒத்திவைக்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் அதற்காக எவ்வுளவு பாடுபட்டோம் என எங்களுக்கு தான் தெரியும். ஆகவே , வங்கி கடன்கள் அனைத்தும் கட்ட குறைந்தது 6 மாதம் காலம் அவகாசம் அளிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்படியும், கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுமான தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க வேண்டும்.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அவசர கால கூடுதல் கடனுதவியாக ஏற்கனவே உள்ள நடப்பு மூலதனத்தில் 25 சதவீதம் கூடுதலாக அதிகரிக்க வேண்டும். இந்த கடனுதவிக்கான அடிப்படை ஆண்டாக 2018-19 ஐ வங்கிகள் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்து வங்கி கடன்களையும் ஒராண்டு காலம் கழித்து கட்டும் வகையில் நிவாரணம் அளிக்க வேண்டும். அதேபோல், கடன் தொகை செலுத்தும் காலத்தை பத்தாண்டுகளாக மாற்றி செலுத்தும்படி அனுமதிக்க வேண்டும்.

சிறு,குறு மத்திய தர தொழிற்சாலைகள் மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பி தொழிற்சாலைகளை இயக்கும்வரை நடப்பு மூலதனம் ரொக்க கடன் ஆகியவற்றுக்கான வட்டித்தொகைளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சிறு,குறு மத்திய தர தொழிற்சாலைகளை பொறுத்தவரையில் பணப்பரிவர்த்தனை என்பது இரண்டு வாரம் காலம் தான். அப்படியிருக்க விடுப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது ? தொழிற்சாலைகளில் பணம் பரிவர்த்தனை இல்லை, பணமும் இல்லை. தற்போது இதனை சரிபடுத்த வேண்டும் என்றால் இ.எஸ்.ஐ, பி.எப்-பில் உள்ள சுமார் ரூ.1 லட்சம் கோடி பணத்தை நிவாரணத்திற்காக மத்திய அரசாங்கம் உபயோகப்படுத்த வேண்டும். 

அடுத்த 6 மாத காலத்திற்கு தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப்- போன்றவை பிடித்தம் செய்யாமல் இருக்க அரசு அனுமதிக்க வேண்டும்.  

ஒவ்வொரு முறையும் வங்கிகளில் கடன் வாங்கும் போது பத்திரவு பதிவு செய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகிறது. அடுத்து வாங்கப்படும் தொழில் கடன்களுக்கு கட்டணம் இல்லாமல் பத்தரவு பதிவு செய்ய வேண்டும்.

மின் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, அனுமதி கட்டணம் உள்ளிட்ட கட்ட வேண்டிய தொகைகள் அனைத்தும் தொழிற்சாலைகள் இயங்க துவங்கி ஒரு மாதம் காலம் கழிந்த பின்பே கட்டணங்களை கட்ட கால அவகாசம் தர வேண்டும்.

குறுந்தொழிற்சாலைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாயும், சிறு தொழிற்சாலைகளுக்கு பதினைந்து லட்சம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் 6 லட்சம் கோடி சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் தேவைப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் அனைத்தையும் இழந்து மீண்டும் புதிதாக தான் தொழிலை துவங்க உள்ளோம். ஆகவே ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா இல்லை என்கிற சூழ்நிலை வந்தால் தான் தொழிலை துவங்குவோம். அதே நேரம் ,  வங்கிகள் ஒத்துழைப்பு இல்லாமல் தொழிலை மீண்டும் நடத்த முடியாது. தொழில்துறையினர் நஷ்டங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் வங்கிகள் நஷ்டங்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறைதான் வங்கிகளில் உள்ளது இதனை இப்போதாவது மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.