கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் நாளை (மார்ச் 19) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூரில், கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்வு வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, விசைத்தறி தொழிலைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.