கோவை , மே 2- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மத்தியரசு மே 17 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இந்தநிலையில் தென் மாநிலங்களில் வட மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக வேலை இல்லாமலும், உணவிற்கும், தங்கும் இடங்களுக்கும் தவித்து வருகின்றனர். இருப்பினும் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் சில தற்காலிக உதவிகள் செய்து வருகின்றன. மேலும் மத்திய அரசு குறிப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்க உத்தரவு பிறபித்த நிலையில், நேற்றைய கேரளா மாநிலம் ஆலுவாவில் இருந்து புவனேஸ்வர் வரைக்கும் செல்வதற்கு ரயில் இயக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கோவையில் இருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு ஆட்சியர் அலுவகத்தில் முன்பதிவு செய்வதாக எழுந்த வதந்தியை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த போலீசார் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகத்தின் முறையான அறிவிப்பு வந்தவுடன் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் போலீசார் வாயிலாக அறிவிப்பு கொடுக்கப்படும் எனவும், அதன்பின்னர் பகுதிவாரியாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட ரயிலில் அனுப்படுவார்கள் என தெரிவித்தனர் . இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.