tamilnadu

img

நோ ஒர்க்... 2 லட்சம் தொழிலாளர் வேலை பறிபோகும் அபாயம்

கோயம்புத்தூர்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 கோவையில் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது. வாகனத்திற்கு பொருத்தப்படும் மீட்டர் தயாரிப்பில் பிரிக்கால் நிறுவனம், ஹாரன் தயாரிப்பில் ரூட்ஸ் நிறுவனம், வாகன எஞ்சின் தயாரிப்பில் இன்டோசெல் மற்றும் வெளிநாட்டு கார்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கிராவ்ஸ்மென் உள்ளிட்ட ஏராளமான பிரபல பெரும் நிறுவனங்கள் கோவையை மையமாக கொண்டு செயல்படுகின்றன.
இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனங்களைச் சார்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறுந்தொழில்கள் ஜாப் ஆர்டர்களை பெற்று தொழிற்கூடங்களை இயக்கி வருகின்றன. லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை தவிர இத்தொழில் சார்ந்து ஏராளமான சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், சுமைப்பணிதொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இயங்குகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது.பாஜகவின் கடந்த ஆட்சியில் கண்மூடித்தனமான ஜிஎஸ்டி விரிவிதிப்பால் சிறுகுறுந்தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதன்தொடர்ச்சியாக வாகன உதிரிபாகங்களின் உற்பத்தியான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்சமான 28 சதவீத ஜிஎஸ்டி வரியின் காரணமாகவும், மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மானியம், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் பல்வேறு மானியம் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திடீர் நடவடிக்கையால் வழக்கமான வாகனங்களில் முதலீடு செய்வதா என வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கைகள் வாகன விற்பனையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை
பிரபல வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆர்டர் பெற்று தொழிற்கூடங்களை நடத்தி வருகிறோம். கடந்த சில நாட்களாக இந்நிறுவனங்களில் இருந்து ஜாப் ஆர்டர்கள் கிடைப்பதில்லை. உதிரிபாகங்கள் தயாரிக்க கிடைக்கும் ஜாப் ஆர்டர்கள் அடியோடு நின்றுவிட்டன.நாங்கள் ஜாப் ஆர்டர் பெறுகிற பெரிய நிறுவனங்கள் 40 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊழியர்களை பணியில் இருந்து நீக்க பட்டியல் தயாரிக்க சூபர்வைசர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. சூபர்வைசர்களை நீக்க மேலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த ஊழியர் பணிக்கு வேண்டாம் என பட்டியல் தயாரிக்கிறார் சூபர்வைசர். நிறுவன மேலாளர் தயாரித்த பட்டியலில் சம்பந்தப்பட்ட சூபர்வைசரே பணியில் இருந்து நீக்கப்படுகிறார். இதுபோன்ற ஒரு நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. 

=====கோவையைச் சேர்ந்த நவோதயா இன்ட்டஸ்ட்ரி உரிமையாளர் தி.மணி======

50 பேரின் இடத்தில் 5 பேர்
               கோவை சிட்கோ பகுதியில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பொருட்களை ஜாப் ஆர்டர் முறையில் செய்து தந்து வந்தனர். இந்நிலையில் ஆட்டோமொபைல் தொழில் சரிவினால் 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஆர்டர் குறைந்துள்ளது. இதனால் 3 ஷிப்ட்கள்  இடைவிடாது இயந்திரத்தோடு இயங்கி வந்த தொழிலாளர்கள் தற்போது ஒரு ஷிப்ட்டுக்கே வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘நோ ஒர்க்’ என ஆட் குறைப்பு நடந்து வருகிறது. 50 பேர் பணியாற்றிய இடத்தில் 5 பேர் மட்டுமே பணி செய்து வருகின்றனர். உற்பத்தி குறைவினால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.  வேலை இழப்பினால் வட இந்திய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

====கோவை சிட்கோ உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன்====


தீபாவளிக்கு போனஸ் தர முடியுமா?
               கடந்த பிப்ரவரி மாதம் முதலே மெஷின் வொர்க்கிற்காக வரும் வாகன உதிரிபாகங்கள் வருகை குறைந்து விட்டது. தற்போது முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கார் நிறுவனங்கள், உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை நிறுத்தி வைத்துவிட்டன. ஏற்கெனவே உற்பத்தி செய்து வைத்திருக்கும் உதிரிபாகங்களை கொள்முதல் செய்யாமல் இருப்பதால் அவை தேக்கமடைந்துள்ளன. 60 சதவீத அளவிற்கு உற்பத்தி மற்றும் வருமானம் குறைந்திருப்பதால், வாடகை, சம்பளம் கொடுத்து சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வராத பணத்திற்கு ஜிஎஸ்டி வரி 
தொழில் நெருக்கடி காரணமாக வங்கிக் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. உற்பத்திப் பொருட்களுக்கான தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் வராத பணத்திற்கு 30 நாட்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டியிருக்கிறது. இதே நிலை நீடித்தால் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பை  நம்பியுள்ள 2 லட்சம் தொழிலாளர்கள்  இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள்.

வாங்கிய கடனை கட்ட முடியவில்லை
           கோவையில் 50 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆட்டோ மொபைல்ஸ் துறையை சார்ந்தே உள்ளன. கோவையில் பெரும்பாலான  வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு குறு நிறுவனங்களும், பவுண்டரிகளும் வேலை இல்லாத காரணத்தால்  மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் ஒன்றிரண்டு  ஆட்களை வைத்து வேலை செய்து வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள்  முற்றிலுமாக மொத்தமாக அனைத்து நிறுவனங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு குறு தொழிற்சாலைகள் கடந்த 3 மாதமாக வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். நெருக்கடியை தவிர்க்க சிறு குறு நிறுவனங்கள்  வங்கியில் பெற்றுள்ள கடனுக்கான வட்டி விகிதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். 

=====தமிழ்நாடு குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் (டேக்ட்) ஜேம்ஸ்====

===தொகுப்பு அ.ர.பாபு===