மதுரை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிரஉருக்கு ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடுங்காயமடைந்தவர்கள் 17
பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் வெள்ளியன்று வழங்கினார்.
2018-ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென தூத்துக்குடி மக்கள் பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களை அழைத்துப்பேசுவதில் ஏற்பட்ட தாமதம், இவற்றிற்கிடையில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் காவல்துறை மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மொத்தம் 15 பேர்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்கடுமையாக எதிர்த்ததோடு, கடும்கண்டனம் தெரிவித்தன. ஸ்டெர்லைட்ஆலையை நிரந்தரமாக மூடவேண்டு மென வலியுறுத்தினர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.பூமயில் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களையும் அன்றைய தமிழகஅரசு கைது செய்தது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காவல்துறை தடியடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆனால், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாகக் கூறினார். இத்தகைய பின்னணியில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் பல கட்டங்களாக விசாரணை நடத்தியது.
அருணா ஜெகதீசன் தமது விசாரணையை நிறைவு செய்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மே 14-ஆம் தேதி சமர்ப்பித்தார். இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேரும்கிராம உதவியாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும்பேரூராட்சித் துறைகளில் 17 நபர்களுக்கு இளநிலை உதவியாள ராகவும், ஒரு நபருக்கு ஜீப் ஓட்டுநராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள னர். அதற்கான ஆணைகளை வெள்ளியன்று மதுரை மாவட்ட ஆட்சி யரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கனிமொழி (தூத்துக்குடி), சு.வெங்கடேசன் (மதுரை), சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நமது நிருபர்