articles

img

வேலை... இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்சனை....

தமிழகத்தில் தொழில் உற்பத்தி என்பது பெரும் பகுதி சிறு தொழில்களின் சிறு மற்றும் குறு தொழில்களை சார்ந்து உள்ளது. பனியன், இன்ஜினியரிங், பட்டாசு, அச்சு, விசைத்தறி, பாத்திரம், மின் பொருட்கள், ஆடைகள் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முறையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த உற்பத்தியை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களை அரசு உருவாக்கவில்லை. 

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக பல லட்சம் கோடி முதலீடு என அறிவிப்புகள் வருகின்றன. ஆனால் வேலை வாய்ப்புகள் எத்தனை வந்தது என்ற விவரங்களை வெளியிடுவதற்கு அரசு தயாராக இல்லை. 4.6 கோடி ரூபாய் முதலீடு செய்தால் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஜெயலலிதா அரசாங்கமும், எடப்பாடி அரசாங்கமும் மூன்று முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி உள்ளனர். இதனால் யாருக்கு லாபம்?

ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பு நீக்கம் போன்றவை சிறு மற்றும் குறு தொழில்களின் உற்பத்தியில் மிகப்பெரிய நெருக்கடிகளை உருவாக்கின. அரசு உருவாக்கிய நடைமுறைகள் சிறு மற்றும்குறு தொழிலை மூடுவதற்கான நிலைமையை உருவாக்கியது. தொழில் புரிபவர்பலர் இத்தொழிலை கைவிட்டு தொழிலாளர்களாக மாறிய நிலைமையும் உருவானது. ஆத்மா நிர்பார் எனும் சுயசார்பு பற்றி ஏராளமான வெற்று உரைகளை பிரதமர் மோடி நிகழ்த்தி வருகிறார். உரைகளில் உண்மையில்லை என்பது மட்டுமல்ல, அரசின் தொழிற்கொள்கைகளிலும் கார்ப்பரேட் நலனே உயர்ந்து நிற்கிறது. இந்திய நாட்டின் சிறு-குறு தொழில்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றன.  அரசு கடன் வாங்குவதற்கான திட்டங்களை அறிவிக்கின்றன. ஏற்கனவே ஏராளமான கடன்களுடன் தொழில்நடத்துபவர்கள் மீண்டும் கடன் பெறுவதுஇருக்கின்ற நெருக்கடியை அதிகப்படுத்தவே செய்யும். கொரோனா பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கும் இத்தொழிலை மேலும் மேலும் புதிய நெருக்கடியை நோக்கித் தள்ளியது. உற்பத்தி நிறுத்தம், விற்பனையில் தேக்கம், புதிய உற்பத்தியை துவங்க முடியாதது என ஒன்று சேர்ந்து தொழில் செய்பவரை துயரத்திற்கு ஆழ்த்தியது. கடந்த டிசம்பர் மாதம் வரை தொழில் முனைவோர்கள், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குத் தான் கடன் பயன்பட்டது. தொழில் நிலைமை சீராகாதநிலைமையில் மத்திய, மாநில பட்ஜெட்டும் துன்ப துயரங்களுக்கு விடை காண்பதற்கு உரிய முயற்சி செய்யவில்லை. 

வேலை உத்தரவாத சட்டம்
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டமே குறைந்தபட்ச வாழ்க்கைக்கான ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் இச்சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இச்சட்டம் என்பது முழுவீச்சில் 100 நாட்கள் வேலை தரக்கூடிய முறையில் அமலாக்கப்படவில்லை. தமிழகத்தில் சராசரியாக 48 நாட்கள் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடல், தெளிவான பார்வை, கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிந்தனை ஆகியவற்றை இணைத்தால் உயரிய பங்களிப்பாக இருக்கும். ஆனால் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அதற்கேற்ற முறையில் இருப்பதில்லை. நல்ல நிர்வாகம் என்று சொல்லக்கூடியவர்கள் சட்டங்களை முறையாக அமலாக்கினால் வாழ்க்கை ஆதாரத்தை உருவாக்க முடியும். இச்சட்டத்தை 200 நாட்கள் 600 ரூபாய் கூலி என்ற முறையில் விரிவாக்கும் போது தான்கிராமப்புறங்களில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்கிறார் காந்தி.ஆனால் பாஜக, அதிமுக அரசாங்கத்தினுடைய கொள்கைகள் கிராமங்களை அழிப்பதாக இருக்கிறது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த நகர்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கிடப்பிலேயே கிடக்கிறது. வேலைவாய்ப்பு குறித்து கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடக்கூடிய ஆட்சியாளர்கள் அரசின் பொறுப்பை உணர்ந்துமத்தியில் ஆளக்கூடிய அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கின்றனர். மாநிலத்தில் ஆளக்கூடிய அதிமுக அரசாங்கம் கேட்பதற்கு திராணியற்று இருக்கிறது. 

அரசு திட்டங்களும் வேலைவாய்ப்பும்
அரசு தன்னுடைய பட்ஜெட்டிலும் தொலைநோக்கு திட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு தகுந்தமுறையில் செயல்பட வேண்டி இருக்கிறது.தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கக் கூடிய நிலையில், 25 லட்சம் பேர்அரசு தேர்வாணைய தேர்வுகளில் பங்கேற்கக்கூடிய நிலைமையில் வேலையின்மை விகிதத்தின் கடுமையை உணர முடிகிறது. வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி தமிழகத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். 

இளம்பெண்களும், வேலைவாய்ப்பும்
தமிழகத்தில் மேற்படிப்பு பயிலக்கூடியமாணவிகளின் எண்ணிக்கை 51சதமாகும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பெண்கள்கணிசமாக பங்கேற்கின்றனர். சுயமரியாதையுடன் கூடிய கௌரவமான வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியான அடித்தளமாக வேலைவாய்ப்பு திகழ்கிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரம் சமமான கண்ணியமான வாழ்க்கைக்கான ஆதாரமாக அமைகிறது.இளம் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கும், அரசிற்கும் உள்ளது. அதுவே உண்மையானபாதுகாப்பாகும். ஆனால் இதற்கு நேர்எதிரான திசையில் அதிமுக - பாஜக அரசுகளின் கொள்கை என்பது அமைந்துள்ளது. 

இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பும்
நாம் வாழக்கூடிய சமூக அமைப்பு என்பது சாதிய,  பொருளாதார, இன,மொழி ரீதியான பல்வேறு விதமான றுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டதாகும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பினை உருவாக்குவதற்கும், அடிமட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கும் அரசியல் அமைப்புச்சட்ட ரீதியான உத்தரவாதமே இட ஒதுக்கீடுகொள்கையாகும். இன்னும் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்ற சூழலில் வாய்ப்பினை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது, ஆனால் சமூக நீதியை, இடஒதுக்கீட்டை மறுத்து வருகிறது. பாஜக - அதிமுக கூட்டணி. பட்ட மேற்படிப்புகள் மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை, அண்ணா பல்கலைக்கழகத்தில் சில துறைகளில் இட ஒதுக்கீடு அமலாக்கப்படாமல் இருப்பதும் உள்ளது. ஏற்கனவே வேலைவாய்ப்பில், கல்வியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கான சம வாய்ப்புக்கான இடஒதுக்கீடு கொள்கை முறையாக அமலாக்கப்படாத நிலையில்,இருக்கின்ற சமூக நீதியையும் சிதைக்கின்ற ஏற்பாட்டை மேற்கொள்வது ஏற்றத்தாழ்வை மேலும் மேலும் அதிகரிப்பதுடன் சமூகத்தை பின்னோக்கி செலுத்துவதற்கான நடவடிக்கையாக அமைகிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதியாக பின்பற்றப்படாததன் காரணமாக ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்களை நிரப்பும் ஏற்பாட்டை அரசுகள் மேற்கொள்ளவில்லை. எனவே உறுதியுடன் சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் முன்னெடுக்க வேண்டிய பணியாகும். 

தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு
மத்திய பணி நியமனங்களில் தமிழகஇளைஞர்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட அரசு திட்டங்களில் கூடதமிழகத்தை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முழக்கத்தை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்வைக்கிறது.கடந்த ஐந்தாண்டு காலமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். போட்டித்தேர்வுகள் உரியமுறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை டி.என்.பி.எஸ்.சி செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றிய விசாரணைநடைபெறும் செய்திகள் வெளிவருகிறது.

குரூப் 1, 2, 4, காவலர் தேர்வு, வி.ஏ.ஓதேர்வு என தொடர்ந்து வந்த செய்திகள்இளைஞர்களின் நம்பிக்கையை குறைக்கிறது. தேர்வுகள் வெளிப்படைத்தன்மை, தேர்வு முறை, தேர்வாளர்களின் பட்டியலை முறையாக வெளியிடுவது. ஊழல்இல்லாமல் பணி நியமனங்கள் ஆகியவை மிக முக்கியமான அம்சங்களாகும்.இதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. இதில் ஏராளமான ஊழல்முறைகேடுகளையும் செய்துள்ளனர்.

ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது பெரும் துரோகம்
தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வரும்சூழலில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெறக்கூடிய வயதை 58 லிருந்து பேரிடர் காலத்தில் 59 ஆகஉயர்த்தியது. அதன் பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் 110 விதியின்கீழ் 60 வயதாக மேலும் உயர்த்தி உள்ளது. இதனால் ஓய்வு பெற வேண்டிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் வேலை நீட்டிப்பை மேற்கொண்டுள்ளனர். இதனால் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு என்பது பறிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறையில் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு நிறுவனங்களுக்கு தரப்படுகின்ற சூழலில் மேலும் வேலைவாய்ப்பை பறிக்கும் வேலையை தமிழக அரசாங்கம் செய்துள்ளது, இளைஞர்களுக்கு இழைத்துள்ள மற்றொரு துரோகமாகும். வேலைவாய்ப்பு என்பது இளைஞர்களின் வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது. வேலை வாய்ப்பை உருவாக்குவது என்பது இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்றால் மிகையல்ல. எனவே ஒட்டு மொத்தத்தில், தமிழக இளைஞர்களின் வேலைக் கனவை கானல் நீராய் ஆக்கிய பாஜக - அதிமுக கூட்டணிக்கு சரியான பாடத்தை புகட்டுவது தமிழக இளைஞர்களின் கடமையாகும்.

கட்டுரையாளர்: எஸ்.பாலா, மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்