tamilnadu

img

கேள்விக்குறியாகும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்.... வேலைக்கேற்ற சம்பளம் இல்லை... பாதுகாப்பற்ற நிலையில் வேலை....

 தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம், கோவளம், அதிராம்பட்டினம், செய்யூர், கேளம்பாக்கம், கடலூர்  உள்ளிட்ட இடங்களில் 16,688 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. 11800 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்த உப்பு உற்பத்தி தொழிலில் 1 லட்சத்து 4 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம்இடம் வகிக்கும் வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியில் 3ஆயிரம் ஏக்கரில் சிறு குறு உற்பத்தியாளர்களும் கோடியக்காடு கடினல் வயல் பகுதிகளில் 6ஆயிரம் ஏக்கரில் இரு தனியார்நிறுவனமும் உப்பு உற்பத்தியில் ஈடுபடுகிறது. இங்கு ஆண்டுதோறும் 9ஆயிரம் ஆயிரம்ஏக்கரில் 61.2 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கிச் செப்டம்பர் வரை நடைபெறுகிறது. வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்டவெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. உலகில் உப்பு உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாம் இடத்தையும், இந்தியா மூன்றாம் இடத்தையும் வகிக்கிறது. இந்தியாவில் ஆந்திரா, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 6.09 லட்சம் ஏக்கரில்உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் 27மில்லியன் டன் உப்புஉற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 76.7சதவீதம் குஜராத்திலும், தமிழ்நாட்டில் 11.16சதவீதமும், ராஜஸ்தானில் 9.8சதவீதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

போதிய விலை இல்லை - தொழிலைக் கைவிடும் நிலை
மொத்த உற்பத்தியில் 62சதவீதம் பெரிய உற்பத்தியாளர்கள் மூலமும், 28சதவீதம் சிறு உற்பத்தியாளர்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது. சாப்பாட்டு உப்பு 60 லட்சம் டன் உற்பத்திசெய்யப்படுகிறது. மீதமுள்ள அனைத்து உப்பும்தொழிற்சாலை உப்பாகப் பயன்படுத்தப்படு கிறது. இதிலிருந்து காஸ்ட்டிக் சோடாவாகத் தயாரிக்கப்படுகிறது. சோடா கண்ணாடி தயாரிக்கவும் மற்றும் உப்பு மூலப்பொருளாகக் கொண்டு 72 வகையான பொருட்கள் தயார்செய்யப்படு கிறது. உப்புதுறை கணக்கின்படி இந்தப் பத்து மாநிலங்களிலும் நேரிடையாக 1லட்சத்து 4ஆயிரத்து 60 பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அயோடின் கலந்து விற்பனை செய்யும் பிளாண்டுகள் 578 உள்ளது. உப்பு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் அதற்கேற்ற விலை கிடைக்காமல்தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனர். தற்போது ஒரு டன் உப்பு ரூ. 500 முதல் 800 வரை விற்பனையாகிறது. உற்பத்தி முழுவீச்சை அடைந்தவுடன் ஒரு டன் ரூ. 350 முதல் 400 வரை மட்டுமே 6 மாதக் காலத்திற்கு விற்பனையாகும். 

பின்பு மழைக்காலம் துவங்கினால்தான் உப்புக்கு விலை இருக்கும். ஆட்கள் வைத்து வேலை செய்யும் கூலி கூட உற்பத்தியாளருக்கு லாபம் கிடைப்பதில்லை. இதேபோல் உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் நள்ளிரவு 2 மணிக்கு உப்பளத்திற்கு வந்து வேலையைத் துவங்குவார்கள். அவர்கள் மதியம் வரை வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் குடிநீர், கழிவறை, ஓய்வெடுக்கும் அறை என்று எதுவுமே கிடையாது. உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் காலுறை, கையுறை, கருப்புகண்ணாடி என எதுவும் இல்லாமல் வேலை பார்ப்பதால் அவர்களுக்குத் தோல் நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு நோய்கள் வருகின்றன. தாங்கள் எவ்விதப் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் வேலைப் பார்ப்பதாகப் பெண் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உற்பத்தியாளர்களுக்கும், உப்பளத் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைக்கெல்லாம் தற்போது உப்புக்கு விலை இல்லாததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கோவிட் 19 ஊரடங்கு கால  நெருக்கடியான நிலையில் இன்னும் அதிகப் பிரச்சனைகளைத் தாங்கள் சந்திப்பதாகக் கூறுகின்றனர். குடிசை தொழிலாகத் தொடங்கப்பட்ட இந்த உப்பு உற்பத்தி தற்போது பெரிய கம்பெனிகளில் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து விட்டது. ஆனாலும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆங்கிலேய ஆட்சியை விரட்டத் தண்டியில் காந்தியும் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் ஆயிரக்கணக்கானோரும் கலந்த கொண்டு உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தியவர்களை அப்போதைய ஆங்கிலேய அரசு சிறைவைத்த சிறைச்சாலை இன்னமும் நினைவு சின்னமாக உள்ளது. உப்பு சத்தியாகிரக நினைவுதூண் ஒன்றும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகல ரயில்பாதை, சரியான சாலை வசதி இல்லாததால் உப்பு விற்பனை சுணக்கமாகி ஆண்டு முழுவதும் தேக்கம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு தேக்கம் ஏற்பட்ட நிலையில் உப்பை விற்பதற்குப் பல்வேறுஇடங்களில் உப்பு தட்டுப்பாடு என்ற வதந்தியைக் கிளப்பி விட்டு உப்பை விற்பனை செய்தனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டச் சபையில் 200 கோடிரூபாயில் சோடா  தொழிற்சாலை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் தமிழக அரசு உப்பு துறை மூலம் இப்பகுதியில் 10ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதுவும் அறிவிப்போடு நின்றுவிட்டது. இந்தியாவில் 87.6 சதவீதம் சிறு உற்பத்தியாளர்களும் (10 ஏக்கருக்குக் குறைவாகவுள்ளவர்கள்) 5.8 சதவீதம் பெரிய உற்பத்தியாளர்களும் (100 ஏக்கருக்கு மேல்) உள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இது ரயில்கள் மூலம் 60 சதவீதமும், லாரிகள் மூலம் 38 சதவீதமும், கப்பல் மூலம் 2 சதவீதமும் ஏற்றுமதி ஆகிறது. இந்தியாவில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 35 லட்சம் டன் உப்பு ஜப்பான், பங்களாதேஷ், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, வியட்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

பாதிக்கப்படும் சிறு உற்பத்தியாளர்கள் 
இந்தியாவில்  சிறு உற்பத்தியாளர்கள், பெரிய உற்பத்தியாளர்கள், அரசு என மூன்று வகையில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.  பெரிய நிறுவனங்கள் சிறு உற்பத்தியாளர்களின் விற்பனை சந்தையில் நுழைவதால் சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் சிறு  உற்பத்தியாளர்களின் உப்பிற்குச் சரியான விலை கிடைக்காததால் அவர்களின் உப்புத்தொழில் கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் கடந்த 2ஆண்டுகளாக நெருக்கடி அதிகமாகியுள்ளது. கோவிட் 19 ஊரடங்கு காலச் சோதனையால் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேலும் கேள்விக்குறியாகியுள்ளது

கட்டுரையாளர்  : ஐ.வி.நாகராஜன்,  சிபிஐ(எம்), மாநிலக்குழு உறுப்பினர்