கோவை:
கோவை காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் ஒருவர் மர்மமான முறையில் ஜன்னலில் கயிற்றை மாற்றி முட்டிபோட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார். இவரை கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சித்தரித்திருப்பதாகவும், அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (25). இவர் கோவையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடன் பணிபுரியும் சககாவலர் அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், புதனன்று நீண்ட நேரமாக மகாலட்சுமி தொலைபேசி அழைப்பை ஏற்காததால் காவலர்அருண் உப்பிலிபாளையம் குடியிருப்பிற்கு சென்று பார்த்த போது, மகாலட்சுமி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றை கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய ரேஸ்கோர்ஸ் போலீசார் தற்கொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வீட்டு ஜன்னலில் கயிற்றை கட்டி எப்படி முட்டி போட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும். இது திட்டமிட்ட கொலை எனவும், மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது: மகாலட்சுமி தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அளவு கோழையான பெண் அல்ல. மிகவும் தைரியமான பெண். காவலர் அருணை காதலித்த நிலையில் அருணின் பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. எனினும்அருண் தொடர்ந்து மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையிலேயே மர்மமான முறையில் மகாலட்சுமி இறந்திருக்கிறார். இதுதிட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவே காவல்துறை நியாயமான விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து மகாலட்சுமி மற்றும் அருண் ஆகிய இருவரின் செல்போன்களையும் கைப்பற்றி ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.