tamilnadu

img

மாநகராட்சி நிலத்தை முறைகேடாக அபகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர்:
மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை தகரக் கொட்டகையில் தள்ளிவிட்டு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’ என்கிற பெயரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றியுள்ளதை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளித்துள்ளது.  இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு:

கோவை ஆர்.எஸ்.புரம் 23 ஆவது மாநகராட்சி வார்டு ராமச்சந்திரா வீதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுகாதாரத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. நீண்டகாலம்செயல்பட்டு வந்த இந்த இடம் பழமையானதால், இதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட  2015,2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதனையடுத்து சுகாதார ஆய்வாளர் அலுவலகம் தற்காலிகமாக மேற்கு மண்டல அலுவலகத்தில் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.1.75 கோடி செலவழித்து சுகாதாரத்துறை அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்டும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 
ஆனால், இக்கட்டிடத்தை தகரக் கொட்டகையில் இயங்கும் சுகாதாரத்துறை அலுவல கத்திற்கு கொடுக்காமல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர்  எஸ்.பி.அன்பரசன் நடத்தும் ‘நல்லறம்’ அறக்கட்டளைக்கு சொந்தமான அம்மா ஐஏஎஸ் அகாடமி என்றபெயரில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி அம்மா ஐஏஎஸ் அகடாமி துவக்க விழா 2019 ஆம்ஆண்டு பிப்பரவரி 3 ஆம்தேதி நடை பெற்றது. இதில் அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையர் விஜய்கார்த்திகேயன் மற்றும் கோவையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை பங்கேற்கச் செய்துள்ளனர். ஐஏஎஸ் அகாடமி அரசுத் துறைக்கு சொந்தமானது என்கிற தோற்றத்தை உருவாக்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 

ஆனால், அரசுத்துறைக்கும் அம்மா ஐஏஎஸ் அகாடமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாறாக, சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தை அமைச்சரின் தனிப்பட்ட அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றி அதன்துவக்க விழாவை நடத்தியுள்ளனர் கோவை மாநகராட்சி அதிகாரிகள். மேலும், இன்றுவரை  சுகாதாரத்துறை அலுவலகத்தை புது அலுவலகத்தில் இயங்கவிடாமல் தகரக் கொட்டகையிலேயே இயங்க வைத்துள்ளனர்.இவ்வாறு பொதுப்பணத்தில் கட்டிய  அலுவலகத்தை இயங்கவிடாமல்,  முழு  வளாகத்தையும் அமைச்சரின் அறக்கட்டளைக்கு  வழங்கி அரசுக்கு இழப்பை  ஏற்படுத்தி யுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த வளாகத்தை முழுவதுமாக தனது அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளார். மேலும், இந்தவளாகம் கோவை மாநகராட்சிக்கு  சொந்தமானதுஎன்கிற எந்த அத்தாட்சியும் வைக்கப்படவில்லை. 

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விபரங்கள் கேட்டபோது, கோவை மாநகராட்சி, விபரங்களை, தரமறுத்து சட்டவிரோதமாக நிராகரித்துள்ளது. மேலும் அமைச்சரின் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட மன்ற தீர்மானம், ஒப்பந்த விவரங்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. கோவை மாநகராட்சி டெண்டர்கள், ஏலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இணையதளத்தில் இருப்பினும், அமைச்சரின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட டெண்டர்கள் மற்றும் ஏலம் விவரங்கள் மட்டும் இணையதளத்தில் இருந்து கோவை மாநகராட்சி அலுவலகங்களால் மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. 

மேலும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலகம் எங்கு செயல்படு கிறது என்கிற கேள்விக்கு தகவல் அலுவலர் புதிய வளாகத்தில் என்றும், மேல்முறையீடு அலுவலர் பழைய அலுவலகம் என்று முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளனர். தகவல் அறியும்உரிமை சட்ட மனுவிற்கு பின் தற்போது கோவை மாநகராட்சி அலுவலர்கள் புதிய வளாகத்திற்கு சென்று அம்மா ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் என்னும் பலகையில் மீது ஒரு பிளக்ஸ்கொண்டு கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்சுகாதார ஆய்வாளர் அலுவலகம் என்று ஒட்டியுள்ளனர். அதேநேரம், அரசின் பணத்தை முறைகேடு செய்துவிட்டு குளுகுளு அறையில் அம்மா ஐஏஎஸ் அகாடமியும், தற்போது வரை சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள தகரகொட்டகையில்தான் இயங்குகிறது. ஆகவே, இந்த பாரபட்சம், முறைகேடு மற்றும் ஊழல் குறித்த முகாந்திரம் தெளிவாக உள்ள நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது உடனடியாக ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கையெடுத்து கும்பிட்டு, எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சும் தொணியில் பதறினர். அமைச்சரின் சர்வ அதிகாரத்தின் கீழ் தாங்கள் ஏதும் செய்யமுடியாது என்பதை அந்த வார்த்தைகள் தெளிவுபடுத்தின.