tamilnadu

img

உணவகத்திற்குள் புகுந்து மக்கள் மீது வெறித் தாக்குதல்..... போலீசாரின் நடவடிக்கைக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம்....

கோவை:
கொரோனாவை காரணம் காட்டி உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீசாரின் செயலுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா  பாதிப்புநாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  புதியகட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. திரையரங்குகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் 50% வாடிக்கையாளர்களுடன்  செயல்படவும்  அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வணிகநிறுவனங்கள் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.  

இந்நிலையில்,  கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் இரவு 10 மணிக்குஉணவு உட்கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம்  மத்திய பேருந்து நிலையம் முன்பாக  வெளியூர் பேருந்துகள் செல்லும் இடத்தில்  ஸ்ரீ ராஜா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஞாயிறன்று இரவு பத்து மணிக்கு பாதி கடை மூடி இருந்த நிலையில் ஓசூரில் இருந்து வந்த ஐந்து பெண்கள் பசிக்கிறது ஏதாவது சாப்பிட உள்ளதா என கேட்டுள்ளனர். இரவு நேரம் அதுவும் பெண்கள் என்பதால் கடை ஊழியர்கள் கடைக்குள்ளே அனுமதித்து தோசையை கொடுத்துள்ளனர். அப்போது  அங்கு வந்த உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கடைகளைஅடைக்கச் சொல்லி நிர்பந்தம் செய்துள்ளார். மேலும் இரவு 10.21 மணிக்கு ராஜா உணவகத்திற்குள் நுழைந்த உதவி ஆய்வாளர் முத்து, உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மீது லத்தியை கொண்டுதாக்குதல் நடத்தினார்.  இதில், சாப்பிட வந்தஓசூரை சார்ந்த ஜெயலட்சுமி உள்ளிட்ட மூன்று பேர் காயம் அடைந்தனர். இதில், கடை ஊழியர்கள் இருவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவகத்திற்குள் நுழைந்து போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம் கடையின் சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்  காவல் துறை உயர் அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.உணவகத்திற்குள் சென்று உதவி  ஆய்வாளர் முத்து தாக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியான நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் சம்பவம்  தொடர்பாக மாநகரகாவல் ஆணையருக்கு அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில்  உணவகத்திற்குள் புகுந்துவாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம்
கொரோனாவை காரணம் காட்டி உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீசாரின் செயலுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பி.ஆர்.நடராஜன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற உணவகத்தில் மொத்தமாக 6 பேர் கூட இல்லை. மேலும் இரவு10 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உணவகங்கள் இரவு 11 மணிவரை செயல்படலாம். கடையில் ஐம்பது சதவீதம் அளவிற்கு அமர்ந்து சாப்பிடலாம் என அரசு ஆணைபிறப்பித்துள்ளது. இந்நிலையில் போலீசாரின்இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.  ஒருவேளை அரசு வழிகாட்டுதலை மீறியிருந்தால் கூட சட்டப்படியான அபராதத்தை விதித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால்போலீசார் லத்தியால் தாக்குவதற்கு யார் அதிகாரம் அளித்தார்கள். அதுவும் பெண்கள், குழந்தைகள் என பாராமல் உணவு உட்கொண்டிருந்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது. தற்போது சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை வேறு துறைக்குமாற்றியதாக அறிகிறோம். இதுபோதுமானதல்ல. இந்நடவடிக்கை வெறும் கண்துடைப்பாகவே பார்க்கிறோம். சம்பந்தப்பட்ட காவல் உதவியாளர் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளார். உடனடியாக சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல்ஆணையர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.