சாதி, மத பிரிவினை சக்திகளை புறம்தள்ளி உழைக்கும் வர்க்கம் நிச்சயம் வெல்லும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மே தினம் உரையாற்றினார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் மே தின செங்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
இதையடுத்து, மே தின கொடியேற்றி பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகையில், பல உயிர்களை தியாகம் செய்து உரிமைகளை பெற்ற தினமாக மே தினம் திகழ்கிறது. 136 ஆவது மே தினத்தை கொண்டாடுகிற இதேவேளையில் சிங்காரவேலர் தலைமையில் சென்னை கடற்கரையில் இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தை கொண்டாடிய பெருமைமிகு நூற்றாண்டு இந்த மே நாள்.
இன்று நாடு மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் மிகப்பெரும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நெருக்கடிகளைக் கண்டு தொழிலாளி வர்க்கம் துவண்டு போக வேண்டியதில்லை. மார்க்சியமே வெல்லும் என்பதை உறுதியோடு ஏற்க வேண்டும். ஏனெனில் மார்க்சியம் என்பது வேதம் அல்ல அது சமூக விஞ்ஞானம். எத்தனையோ அடக்குமுறைகளை எதிர்கொண்டு வெற்றி தோல்விகளை பார்த்துள்ளது. மார்க்சியம் மூடநம்பிக்கை, சட்டம் சார்ந்தது இல்லை. இது சமூக விஞ்ஞானம். உழைப்பாளி மக்களின் நம்பிக்கையை சார்ந்தது. ஆகவே நாம் வெல்வோம். சாதி, மத, ராணுவ அடக்கு முறைகள் அனைத்தையும் எதிர் கொண்டு மார்க்சியம் முன்மொழிந்த பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே நிச்சயம் நாம்தான் வெற்றி பெறுவோம்.
உழைப்பாளி மக்கள் இடதுசாரி இயக்கத்தை பலப்படுத்துவதில் கூடுதல் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என மே நாளில் சூளுரைப்போம் என்றார்.
இதில் கட்சியின் அமைப்புக்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற மேதின நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் எம்பி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.செல்வராஜ், சிஐடியு ஹோட்டல் சங்க நிர்வாகி சந்தோஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.