கோவை, பிப். 7 – கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூன்றுபேருக்கு ரூ 2.10 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை ஞாயிறன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். இதன்தொடர்ச்சியாக 2020க்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு வழங்க மூன்று சக்கர வாகனத்திற்கான நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தார். இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று மூன்று மாற்று திறனாளிகளுக்கு 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாகனம் ஞாயிறன்று வழங்கப்பட்டது. கோவை காந்திபுரம் 2 ஆவது வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகன்காளி பாளையத்தை சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மூன்று சக்கர மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களை ஒப்படைத்தார். முன்னதாக இந்நிகழ்வில் மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த் ராம் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். முன்னதாக வாகனத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.