tamilnadu

img

தமிழகத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்படும் - அமைச்சர் முத்துச்சாமி

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்து,  தமிழகத்தில் பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் விராலியூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி கார்த்திக் இளைஞர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியில் கோவில் அர்ச்சகராக உள்ள பாஸ்கர் மற்றும் இளைஞர் ஹரீஷ் ஆகிய இருவரும் யானை தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துச்சாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரீஷ் என்ற இளைஞரையும் அமைச்சர் முத்துசாமி சந்தித்து,  உதவித்தொகையை வழங்கினார். பின்னர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த கார்த்தியின் வீட்டிற்கு அமைச்சர் முத்துசாமி நேரில்  சென்று,  பெற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.  அதனை தொடர்ந்து ரூ.10 லட்சத்திற்கான இழப்பீடு காசோலையைப் பெற்றோரிடம் வழங்கினார்.

கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறும் போது :  தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பாஸ்கர் மற்றும் ஹரீஷ் என்ற இருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளோம்.  விரைவில் அவர்கள் குணமடைவார்கள். அதே போல் யானை தாக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.  அதன் அடிப்படையிலேயே நேரில் சந்தித்து நிவாரண உதவியைக் கொடுத்துள்ளோம். இதுபோக கட்சி நிர்வாகிகளும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.

மேலும் காட்டு யானைகள் வரக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல யானை ஊருக்குள் வருவதைத் தடுப்பது குறித்து ஆலோசனை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  இது குறித்தும் துறை சார்ந்த அமைச்சர்  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  விரைவில் ஈரோடு, கோவை மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை வழித்தடங்கள் ஹாக்காவில் இருந்து மாற்றப்படாது. இதனை ஒழுங்கு செய்யவே மீண்டும் மறு அளவீடு  செய்யப்பட்டு வருகிறது.  எந்தெந்த பகுதிகள் ஹக்காவில் இருக்க வேண்டும்,  எந்தெந்த பகுதிகள் இருந்து வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்யப்படும்.

மேலும்  வனவிலங்குகள் பாதிப்பு,  நிலச்சரிவு போன்ற அபாயம் உள்ள பகுதிகளில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இயல்பு நிலைக்குத் திரும்பி பின்னர் தமிழக தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.  பின்னர் தமிழகத்தில் அம்மாதிரி அபாயம் உள்ள பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.  தேவையில்லாத இடங்கள் ஹாக்காவிலிருந்து நீக்கவும், தேவையான இடங்களை ஹாக்காவிற்குள் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு பருவகாலத்திலும் கோவையில் மழைக்காலங்களில் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. வரும் 9 ஆம்  தேதி தமிழக முதல்வர் கோவை வருகிறார். அன்று தமிழ் புதல்வன் திட்டத்தைத் துவங்கி வைக்கிறார். தொடர்ந்து உக்கடம் மேம்பாலம் திறப்பு, கணியூர் பகுதியில் கலைஞர் சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் மதியம் மீண்டும் சென்னை செல்கிறார்  எனத் தெரிவித்தார்.