ஆழம் பார்த்தான் - கோவி.பால.முருகு
கோடைக் காலத்தில் அந்த ஊரில் இருக்கும் பெரிய கிணற்றில்(துரவு) குளிப்பதுதான் ஊர் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான பொழுது போக்கு.கண்கள் சிவக்கும் அளவிற்குக் கும்மாளம் போட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு வருவார்கள்.
அந்த துரவு(பெரிய கிணறு) மிகுந்த ஆழம் உடையது.கோடைக் காலத்திலும் வற்றாத அளவிற்கு ஆழமாகத் தோண்டப் பட்டது.அப்போது கோடை விடுமுறை என்பதால் வெளியூரிலிருந்து மணிவண் ணன் அவனுடைய மாமா வீட்டிற்கு வந்தி ருந்தான்.மதியக் குளியலுக்கு அந்த தெருவில் வசிக்கும் தன்னுடைய உற வினர்களின் மகன்களோடு இவனும் சேர்ந்து கொண்டு துரவுக்குச் சென்றான். இவன் குளிக்க துரவுக்குச் செல்வது அவன் மாமாவுக்கோ அத்தைக்கோ தெரி யாது. தெரிந்தால் அனுமதித்திருக்க மாட் டார்கள்.மணிவண்ணனுக்கு நன்றாக நீச்சல் தெரியும். அவன் சென்னையில் இருப்பதால் அவன் படிக்கும் பள்ளியில் இருக்கும் நீச்சல் குளத்தில் நீந்தப் பயிற்சி பெற்றவன்.அந்தத் துணிவில் துரவில் குளிப்பதற்கு அவர்களோடு சென்றான். ஆனால் அந்தத் துரவின் ஆழம் எவ்வ ளவு என்பது அவனுக்குத் தெரியாது. கிணற்றருகில் சென்றவர்கள் கால் சட்டையை அவிழ்க்காமலேயே குளிக்கத் தயாரானார்கள்.கிணற்றில் இறங்கு வதற்காகக் கிணற்றைச் சுற்றி மேலிருந்து கீழாக இறங்கும் கருங்கல் புதைத்த படிக்கட்டுகளில் இறங்கினார்கள்.ஒவ்வொருவராக கிணற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தார்கள். அப்போதுதான் பழனிவேல் “டேய்…மணி..இந்தக் கிணற்றில கீழ போய் மண் எடுத்துவர என்னால் மட்டும்தான் முடியும்.மற்றவர்கள் எல்லாம் என்னோட போட்டி போட்டு தோத்துதான் போயிருக் காங்க தெரியுமா?”என்று தன்னுடைய திறமையை மணியிடம் போட்டுக் காட்டி அவனைப் போட்டிக்கு மறைமுகமாக இழுத்தான். மணிவண்ணன் நீச்சல் பழகும் அந்த நீச்சல் குளத்தில் மேலிருந்து குதிப்ப தற்குரிய இடம் ஆழமாக இருக்கும்.அதி லேயே குதித்துக் கீழே போய்த் தரை யைத் தொட்டுவரும் நம்மைப் பற்றித் தெரியாமல் சவால் விடுகிறான்.அவனு டைய அந்த சவாலில் வென்று அவனைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி மணி வண்ணன் மனத்தில் தோன்றிவிட்டது. “சரிடா…நீ சொல்ற சவால்ல நான் ஜெயிச்சிக் காட்டறேன்.என்ன பந்தயம்” என்றான்.”அப்படியா…சரி..நீ ஜெயிச் சுட்டா நம்ம ஊரு முருகா தியேட்டர்ல படம் பாக்க என்னுடைய செலவில் உன்னை அழச்சிகிட்டுப் போறேன்.ஓகேவா…?”என்றான்.ஒத்துக் கொண்ட மணிவண் ணன் நன்றாக மூச்சை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கிணற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தான். நீச்சல் பழகியவன் என்பதால் வேக மாகக் கீழ் நோக்கிப் போனான்.ஒரு இரு பதடி ஆழத்திற்குப் போயிருப்பான்.ஆனால் தரை தட்டுப்படவில்லை. இருந்தா லும் சவால் விட்டுவிட்டோமே தோற்றுப் போகக் கூடாது என்ற வெறியில் இன்னும் கீழே போனான். அப்போதும் தரை தட்டுப் படவில்லை. இனிமேல் மூச்சுகட்ட முடி யாது என்ற நிலை வந்துவிட்டது.சவாலை விட உயிர் மீது இப்போது பயம் அதிக மாயிற்று. கீழே செல்லும் முடிவைக் கைவிட்டு மேலே வர ஆரம்பித்தான்.அவன் அதிக ஆழத்திற்குச் சென்றுவிட்டதால் அவ்வ ளவு விரைவாக மேலே வர முடிய வில்லை. விழி பிதுங்கியது.ஒரு கட்டத் தில் மூக்கிலும் காதிலும் தண்ணீர் புகுந்து விட்டது.வயிறு முட்டத் தண்ணீர் குடித்து விட்டான்.இன்றோடு நம் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணும் போது தலை கிணற்று நீருக்கு மேலே வந்து விட்டது.இருந்தாலும் பயத்தால் கால் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. தட்டுத் தடுமாறி கிணற்றோரம் இருக்கும் கருங்கல் படியைப் பிடித்து அதில் ஏற முடியாமல் தடுமாறி ஏறி அமர்ந்தான். அவன் உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்த பழனிவேலு “டேய்..மணி என்னாச்சுடா?இப்படிப் பேய் அறஞ்சா மாதிரி உக்காந்திருக்க” என்று கேட்க நடந்ததைச் சொன்னான் மணிவண்ணன்.அதைக் கேட்ட அனைவரும் “மணி.. இந்தக் கிணற்றோட ஆழம் எவ்வளவு என்று தெரியாமல் முட்டாள் தனமா முடிவெடுப்பியா.? இப்ப என்ன ஆச்சு பாத்தியா…நல்ல வேளை தப்பிச்சிகிட்ட.இல்லேன்னா என்ன ஆயிருக்கும்? நெனச்சுப் பாக்கவே பயமா இருக்குடா.. கீழே உள்ள அழுத்தத்தால் தண்ணீர் காதுக்குள் புகுந்துவிட்டது.காது அடைத்துக் கொண்டு பேசுவது கேட்கவில்லை.அதை நண்பர்களிடம் சொன்னான்.இதை எப்படியாவது வீட்டிற்குத் தெரியாமல் மறைத்துவிடலாம் என்றிருந்தவர்களுக்கு இவனுடய காது பிரச்சனையால் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.இந்த நிகழ்ச்சி யைக் கேட்ட அவனுடைய மாமா பதறிப் போனார். ”என்னடா…மணி, இப்படிப் பண்ணிட்டே. எதாவது ஒன்னு ஆயி ருந்தா நான் என்ன பதில யாருக்குச் சொல்றது? குளிக்கப் போறத ஏன் அத்தை கிட்ட சொல்லல. எனக்குத் தீராப் பழியை உண்டாக்கப் பாத்தியே”என்றவர் முகத்தில் பயத்தின் சுவடு தெரிந்தது. மாலை பக்கத்தில் இருக்கும் காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அழைத்துச் சென் றார். டாக்டர் பார்த்துவிட்டு” ஆழத்துக்குப் போனதால நீர் அழுத்தம் ஏற்பட்டுக் காதில் தண்ணீர் புகுந்துவிட்டது. அத னால் செவிப்பறையே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு.மாத்திரை, காதில் போட சொட்டு மருந்து எழுதித் தாறேன். அதை ஒரு நாளைக்கு மூன்று தடவை போட்டு வாங்க. நாலு நாள் கழிச்சி மீண்டும் அழச்சிகிட்டு வாங்க பாக்கலாம்”என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால் இரண்டு நாள்கள் மருந்து போட்டும் குணமாகவில்லை. மாறாகக் காதிலிருந்து சீழ் வடிய ஆரம்பித்தது.உடனே மீண்டும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். காதின் உள்ளே நவீன கருவியை விட்டு வெளியில் இருக்கும் கணினித் திரையில் பார்த்தார்.காதை நன்றாகச் சுத்தம் செய்து அவரே ஒரு மருந்தைக் காதில் சொட்டு சொட்டாக விட்டார்.இரண்டு மூன்று நாள்களில் சீழ் வடிவது நின்றது. மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது, ”புண் ஆறிவிட்டது ஆனால் இடது காது ஐம்பது விழுக்காடு கேட்கும் திறனை இழந்து விட்டது. அதை ஒன்றும் செய்ய முடியாது, காது கேட்கும் கருவியைத்தான் பயன்படுத்த வேண்டும்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதிலிருந்து எவ்வளவு வற்புறுத்திக் கூப்பிட்டாலும் அந்தக் கிணற்றுக்குக் குளிக்கப் போவதை அறவே நிறுத்தியது மட்டுமல்ல, இனி வெளியில் எங்கு போனா லும் அங்குள்ள ஏரி, குளம், ஆறு இவை களில் குளிப்பதில்லை என்று முடிவு செய்தான்.
போக்கும் தாழ்வை - புலிகரம்பலூர் அ.பொன்னையன்
ஆற்று வெள்ளம் மேட்டு மேலே ஏறுது -தெருவில் ஆழி போல அலைகள் கொண்டு மாறுது! ஊற்று நீராய் வீட்டில் எல்லாம் பாயுது-அங்கே உள்ள தெல்லாம் அடித்துக் கொண்டு போவுது! மக்கள் எல்லாம் உயிரைக் காக்க ஓடுது-ஆடு மாடு கோழி அள்ளி வெள்ளம் ஆடுது நிற்கும் வீட்டை நீரின் வேகம் வீழ்த்துது நிறைந்த மரங்கள் காற்றின் வேகம் சாய்க்குது! ஊழி வெள்ளம் பார்த்து மக்கள் நொந்தனர்-ஊரில் உணவும் நீரும் இடமும் இன்றி வெந்தனர்! சூழும் துன்பம் நீக்க வல்லார் யாவரே?-அங்கே துன்பம் போக்கும் கருணை உள்ளம் ஆவரே! விளைந்த பயிர்கள் வீணாய் அழுகிப் போச்சுது-உழவர் விட்ட கண்ணீர் வீதி நிறைய லாச்சுது களைந்து துன்பம் போக்க வேண்டும் அரசு-உழவர் காக்க விரைந்து கொடுக்க வேண்டும் காசு! விளைத்த பொருட்கு உரிய விலையோ இல்லை-ஒன்றியம் விதைக்கும் துன்பம் அதனால் பெரிய தொல்லை அளவிலா சட்டத் திருத்தக் கொடுமை -மோடி ஆட்சி மக்கள் மீது எய்யும் அம்பை! களைத்து விட்டது விவசாயி வாழ்வு-அவன் காணும் இன்பத் தீர்வு தானா சாவு? சளைக்க மாட்டான் விவசாயி சரிவை -அவன் சங்கொலி முழக்கம் போக்கும் தாழ்வை.