tamilnadu

img

கோவையில் எட்டாண்டுகளாய் பாதியில் நிற்கும் மேம்பால பணிகள்

கோவை:
கோவையில் எட்டாண்டுகளாய் கட்ட முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் எஸ்.ஐ.எச்.எஸ்  காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்பி, எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

கோவை சிங்காநல்லூரிலுள்ள எஸ்.ஐ.எச்.எஸ்  காலனி பகுதியில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையிலான  தமிழக அரசு 23  கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து இப்பாலம் கட்டும் பணிகள் துவங்கப் பட்டன.  இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தஅதிமுக அரசு  எஸ்.ஐ.எச்.எஸ் காலனிரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணியைத் தொடர்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் இந்த ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணி  கடந்த எட்டு வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. 

இப்பாலப் பணிகள் முழுமையடை யாததால் இப்பகுதியில் வாழும் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆளும் அதிமுக அரசு திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட  திட்டம் என்கிற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீதிமன்றத்தைக் காரணம் காட்டி இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டங் கள் நடத்தி வருகின்றனர்.  

பாதியில் நிற்கும் மேம்பாலத்தின் அருகில் இதன் ஒரு பகுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு  கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில்,தமிழக அரசு மேம்பாலப் பணிகளை முடிப்பதற்கு அக்கறை காட்டாமல்
இருப்பது ஏற்புடையதல்ல. நீதிமன்றத் தில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க ஐம்பது குடும்பங்களுடன் அதிகாரிகள் அமர்ந்து பேசினால் பிரச்சனை முடிந்து விடும். அதனை விடுத்து,  திமுக ஆட்சியில் கலைஞர் நிதி ஒதுக்கிய திட்டம்என்பதால், அதிமுக அரசு காழ்ப் புணர்ச்சியின் காரணமாக எட்டாண்டு காலமாக மேம்பால வேலையை முடிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது.கலைஞர் ஒதுக்கிய திட்டம் என்பதால் கலைஞர் ஆட்சிக்காலத்தில் போடப் பட்ட சாலைகளில் அதிமுகவினர் செல்வதில்லையா? கலைஞர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட குடிநீர் திட்டம் என்பதால் அதிமுகவினர் குடிநீரை பயன் படுத்துவதில்லையா? அனைத்துத் திட்டங்களும் அரசாங்க திட்டம் என்பதையும், மக்களுக்கான திட்டம் என்பதை யும் அதிமுக அரசு உணரவேண்டும். 

இதேபோல் கோவை மாநகரின் திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் சாலை, அவிநாசி சாலை என அனைத்துபிரதான சாலைகளிலும் தற்போது மேம்பாலத்திற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்காக ஒட்டுமொத்த நகரத்தையும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாக்கி பொது மக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையா? அல்லது அமைச்சர் எதைச் செய்தாலும் கேட்ப தில்லை என்கிற நிலையை அதிகாரிகள் எடுத்து விட்டனரா! என்கிற சந்தேகம் எழுகிறது. உடனடியாக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி யாளர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல இந்த எஸ்ஏஎச்எஸ் பாலத்தின் பணி களை உடனடியாக துவக்காவிட்டால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி அரசை பணிய வைத்து மக்க ளின் நலனை பாதுகாப்போம் என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் பொங்கலூர் நா.பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா.ஜெயக்குமார், சிபிஎம் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், பீள மேடு நகர செயலாளர் கே.பாண்டியன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், விசிக கலையரசன், கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சி தனபால், வடிவேலு,  தந்தை பெரியார் திராவிட கழகம் கு.ராமகிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஊழியர்களும், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.