உதவி காவல் ஆய்வாளர் தேர்வு ரத்து மீண்டும் தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் உத்தரவு
மதுரை, பிப்.2- உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்க ளுக்கான தேர்வை ரத்து செய்து, மீண்டும் புதிதாக தேர்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தேர்வு முடிவுகளை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து, யூனிபார்ம் சர்வீசஸ் ரிக்ரூட்மென்ட் போர்டு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர், உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். மனுவில், உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றதாகவும், பிரிவு ‘பி’ பகுதி யில் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி தமிழ் மொழியிலிருந்து வினாக்கள் இடம்பெற வில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தனர். அதற்கு பதிலாக, உளவியல் பிரிவிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ள தாகவும், இது தேர்வு விதிமுறைகளுக்கு முரணானது என்றும் மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. எனவே, தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தேர்வை ரத்து செய்து மீண்டும் புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கு திங்களன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழிலிருந்து 10 வினாக்கள் இடம்பெறும் என தெளிவாக குறிப்பிடப்பட்டி ருந்த நிலையில், எந்தத் தமிழ் வினாவும் கேட்கப்படவில்லை. மேலும், தேர்வு முடிவுகள் கட்-ஆப் இன்றி வெளியிடப்பட்டுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல” என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவு களில் பிழை ஏற்பட்டதால், அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிபதி, “தேர்வு முடிவுகளை திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ன?” என்பது குறித்து யுஎஸ்ஆர்பி தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.