tamilnadu

img

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு போராட்டம் சிபிஐ (எம்எல்) நிர்வாகி கைது 


கோவை, ஏப்.21 - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு  கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்எல்) மாநகர செயலாளர் கைது செய்யப்பட்டார். 
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, மத்திய அரசு மாநில அரசாங்கத்தோடு ஒருங்கிணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சிறப்பு ரயில் மற்றும் பிற பொருத்தமுடைய வகையிலான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக செல்லும்போது அவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவும், உணவுப் பொருட்களும், ரூ .10 ஆயிரம் மற்றும் மருந்துகளும் கொடுக்கப்பட வேண்டும்.  அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று சேருவதற்கு முன்பாகவே அந்தந்த ஊர்களில் முறையான சுகாதார வசதியுடன் கூடிய இவர்களை தனித்திருத்தல் காலத்தில் தங்க வைப்பதற்கு அங்கங்கு மையங்கள் நிறுவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சிபிஐ (எம்எல்) கட்சி அவரவர் வீட்டிலேயே போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. 
இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று கோவையில் ஆர். எஸ். புரம் குமாரசாமி காலனியில் நடந்த போராட்டதிற்கு தலைமை வகித்த சிபிஐ (எம்எல்) கட்சியின் மாநகர செயலாளர் எம்.எஸ். வேல்முருகன் மற்றும் ஏஐசிசிடியு  மாநில செயலாளர் லூயிஸ் ஆகியோர் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்கறிஞர் லூயிசை பினையில் விடுவித்தும், வேல்முருகன் மீது பொது அமைதிக்கு எதிராக பங்கம் விளைவித்தல், ஊரடங்கு உத்திரவை மீறுதல், அரசு ஊழியரின் உத்திரவுக்கு கீழ் படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ஜெ எம் 1  நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு 15 நாட்கள் அவினாசி சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தனர். 

இதற்கு.  சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜனநாயக வழியிலும் சட்டத்திற்கு உட்ப்பட்டும் நடந்த இந்த போராட்டங்களுக்கு தமிழகத்தில் மட்டும் குறிப்பாக கோவையில் மட்டும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் உரிமைகளை கோரியவர்கள் மீதே வழக்குத் தொடுக்கும் இந்த அரசையும் காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.