tamilnadu

img

கொரோனா அச்சுறுத்தல்:  அரசு தோட்டக்கலைத்துறை பழப்பண்ணையில் வீணாகும் பலாப்பழங்கள்

 மேட்டுப்பாளையம், ஏப்.13-
மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் சுவை மிகுந்த சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பலாப்பழங்கள் அறுவடைக்கு ஆளின்றி மரத்திலேயே அழுகி வீணாகி வருகின்றன. 
இயற்கை வளம் மிகுந்த நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள கல்லார் பகுதியில் அரசு தோட்டக்கலைத்துறையின் பழப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு அரிய வகை சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பலாப்பழ வகைகள், துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், லிச்சி என பல்வகை பழம் காய்க்கும் மரங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவை அந்தந்த சீசனில் காய்க்கும் போது, பண்ணையாட்கள் மூலம் அறுவடை செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது பலாப்பழ சீசன் துவங்கி இங்குள்ள மரங்களில் பலாப்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்துள்ளன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இப்பழப்பண்ணை பல நாட்களாக மூடப்பட்டுள்ள சூழலில் மரங்களில் இருந்து அறுவடை செய்ய ஆட்களின்றி இவையனைத்தும் மரங்களிலேயே பழுத்து அழுகி வீணாகி வருகின்றன. 
பண்ணையை பராமரிக்க ஆட்கள் வர இயலாததால் சுவைக்கு பெயர் பெற்ற கல்லார் பாலாப்பழங்களை தேடி குரங்கு கூட்டங்கள் படையெடுத்து வந்தபடி உள்ளன. மரங்களில் பழுக்க துவங்கிய பலாப்பழங்களை கடித்து சேதப்படுத்தி வருகின்றன. பண்ணையில் விளையும் பழங்களை முறையாக பராமரித்து, அவற்றை அறுவடை செய்து விற்பனை செய்ய இயலாத காரணத்தினால் அரசு தோட்டக்கலைத்துறைக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.