கோவையில் தனியார் கல்லூரி மாணவரை ஜூனியர் மாணவர்கள் தாக்கிய விவகாரத்தில் 13 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள நேரு பொறியியல் கல்லூரியின் விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்கள், சீனியர் மாணவர் ஒருவர், தங்களிடமிருந்து பணத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டி, இரவு முழுவதும் மண்டியிடச் செய்து, கைகளை உயர்த்தி வைக்கச் சொல்லி, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அக்கல்லூரி நிர்வாகம் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், தாக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.