tamilnadu

img

கோவை செம்மொழிப் பூங்கா இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா இன்று காலை முதல் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறந்துவிடப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பூங்காவைத் திறந்து வைத்தார். அதன்பிறகு சில நிறைவுப் பணிகள் மீதமிருந்ததால் பொதுமக்களுக்கு அனுமதி தாமதமானது. தற்போது அனைத்துப் பணிகளும் முழுமையடைந்துவிட்ட நிலையில் இன்று காலை 6 மணி முதல் பூங்கா பயன்பாட்டுக்கு வந்துவிடும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
தமிழ் மொழியின் செம்மையையும் இலக்கிய, பண்பாட்டுப் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் 23 பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் ஆயிரம் வகை ரோஜாக்கள் கொண்ட மலர்த்தோட்டம், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் சிற்பங்கள், பொட்டானிக்கல் தோட்டம், தமிழ் வரலாற்றைச் சித்தரிக்கும் அனுபவ மையம், செயற்கை நீரூற்று, திறந்தவெளி அரங்கு, கன்வென்ஷன் சென்டர், ஜாக்கர்ஸ் டிராக், குழந்தைகள் விளையாட்டு மண்டலங்கள் உள்ளிட்ட ஏராளமான உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெற்றுள்ளன.
பூங்காவுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. நடைப்பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.100. கேமரா ரூ.25, வீடியோ கேமரா ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25,000, குறும்படம் மற்றும் இதர ஒளிப்பதிவுக்கு ரூ.2,000 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வாக செயல்படும்.
முதல்வர் திறந்து வைத்த பிறகு எப்போது உள்ளே செல்லலாம் என கோவை மக்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்று முதல் திறப்பு எனும் செய்தி நகரம் முழுவதும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.