கோவை மணியக்காரபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையத்தில் தள்ளுவண்டிக் கடையில் பீப் பிரியாணி விற்பனை செய்தவர்களை பாஜக நிர்வாகி மிரட்டும் காணொலி இணையத்தில் வைரலாகி, அந்த வட்டாரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி, சிபிஐ மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாக தள்ளுவண்டிக் கடை வைத்திருக்கும் ரவி, ஆபிதா ஆகியோரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பீப் பிரியாணி விற்றவர்களுக்கு மிரட்டல் விடுத்த பாஜக ஒ.பி.சி அணியின் மாநகர மாவட்ட செயலாளர் சுப்ரமணி மீது 126(2), 192, 196, 351/2 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.