tamilnadu

img

முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தனி அதிகாரியை நியமித்திடுக.. பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை:
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர்  பலியான கொடுந்துயரம் நிகழ்ந்துள்ள நிலையில், அதுதொடர்பாக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உடனடியாக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து  விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை வரலாற்றின் கொடுந்துயரமான சம்பவமாகும். இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.  தமிழக முதல்வர் மேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அறிவித்தபடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலை, உயர்த்தி வழங்கியுள்ள பத்து லட்சம் ரூபாய் நிவாரணம்  மற்றும் இடிந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டித் தருவது, இதரகுடிசை வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட்வீடுகளாக அமைத்து தருவது என்கிறவாக்குறுதியை உடனடியாக நிறை வேற்றும் வகையில் தமிழக அரசு இதற்கெனதனி அதிகாரியை நியமிக்க வேண்டும். இப்பணிகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மேலும் இதே கோரிக்கை யை வலியுறுத்தித்தான்  தலித்அமைப்பினரும் பொதுமக்க ளும் போராட்டங்களில் ஈடுபட்ட னர். ஒரு கொடுமை நிகழ்ந்து  குழந்தைகள், பெண்கள் பலியான சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கோபப்படுவது மனிதஇயல்பு. இத்தகைய போராட்டம் தான் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்காக நியாயம் கேட்டுப் போராடியவர்களை  கடுமையாக தாக்குதல், தடியடி நடத்தி சிறையில் அடைத்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேற்கண்ட கோரிக்கையில் நியாயம்உள்ளது என்பதால்தான்  முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி அளித்துள்ளார்.  ஆனால், கோரிக்கைக்காக போராடியவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்ற செயல். ஆகவே, எந்தவித நிபந்தனையுமின்றி கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்குகொள்வதோடு அவர்களுக்கான நியாயத்தை பெற்றுத்தர உறுதியோடு போராடுவோம். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, மேட்டுப்பாளையம் நடூர் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதனன்று கோவை நாடாளுமன்ற பி.ஆர்.நடராஜன் ஆறுதல் தெரிவித்தார்.