கோவை:
மதரீதியாக மக்களை பிரிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பபெற வேண்டும். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோவையில் புதனன்று வாலிபர் சங்கம் நடத்திய பேரணியில் இளைஞர்கள் எழுச்சிகர முழக்கம் எழுப்பினர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய இப்பேரணியில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்டமாவட்டங்களில் இளைஞர்கள், இளம்பெண் கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியை வாலிபர் சங்க அகில இந்திய துணை செயலாளர் நிதின் கணிச்சேரி துவக்கி வைத்தார். பேரணியில் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.ஏ.முகமது ரியாஸ், மாநில தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா மற்றும் மாநில நிர்வாகிகள் சி.பாலசந்திரபோஸ், எஸ்.மணி கண்டன், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணி கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இருந்து துவங்கி ஆவரம்பாளையம் சாலை, விகேகே மேனன் சாலை வழியாக சித்தாபுதூர் பொதுக்கூட்ட மைதானத்தை சென்றடைந்தது. மேலும் இப்பேரணியின் நிறைவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
4 வாரமல்ல; 4 வருடமாயினும்...
முன்னதாக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை திருத்த சட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டுதலின்படி நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் மதங்களுக்கு மட்டும் எதிரானதல்ல, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோத மானது. குடியுரிமை திருத்த சட்ட வழக்கில் உச்சநீதிமன்ற உறுதியான முடிவை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 4 வார கால அவகாசம் கேட்டுள்ளது. அவர்களின்முடிவு சரியென்றால் 4 நிமிடம் போதுமானது.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது இந்த சட்ட திருத்தம். உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் 13 வது பிரிவை பின்பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கிற்கு நான்கு வருடகால அவகாசம் வழங்கினாலும் எங்கள் போராட்டங்களின் வீரியம் குறையாது. கேரள அரசை பின்பற்றி தமிழக சட்டமன்றத்திலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.