மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.
மணவை முஸ்தபா எழுதிய இசுலாமும் சமய நல்லிணக்கமும் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.
1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர், தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றினார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றினார்.
‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் புகழ்பெற்ற அமைப்புகளாலும் நிறுவனங்களாலும் 40க்கும் மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார் இவர். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சார்பில் ஐந்து விருதுகளை பெற்ற ஒரே தமிழறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
===பெரணமல்லூர் சேகரன்===