அறிஞர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் அண்ணா 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஒரு எளிய நெசவு குடும்பத்தில் பிறந்த அவர் இளம் வயதிலேயே பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவராக திகழ்ந்தார். திருப்பூரில் மாநாடு ஒன்றில் தந்தை பெரியாரை சந்தித்தது அண்ணாவின் வாழ்வில் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் வரலாற்றிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பெரியாரும், அண்ணாவும் இணைந்து தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை கட்டி வளர்த்தனர். பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிட முன்னேற்றக்கழகத்தை அண்ணா, தன் தம்பியருடன் இணைந்து உருவாக்கினார். இந்தி மொழி திணிப்பு போராட்டங்களில் முன்னின்றார்.
மாநில சுயாட்சியை அழுத்தமாக வலியுறுத்தினார். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர் ஆற்றிய உரைகள் வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன. நாடகத் துறையிலும், திரைத்துறையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் அண்ணாவும் ஒருவர். 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியில் அமைந்தது. சடங்கு மறுப்பு, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. பேருந்துகள் நாட்டுடைமை, இருமொழி கொள்கை அடிப்படையிலான ஆட்சி மொழிச் சட்டம், சென்னையில் உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அவரது ஆட்சியில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளில் அவரது தாக்கம் அரசியலில் இன்றளவும் தொடர்கிறது