திருப்பூர், ஏப். 23 -திருப்பூரில் பின்னல் புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து உலகப் புத்தக தின சிறப்புக் கண்காட்சியை நடத்தினர்.திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் உள்ள பின்னல் புத்தகாலயத்தில் எளிய முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதி புத்தகாலயம் உள்பட பல்வேறு முன்னணி புத்தக நிறுவனங்களின் புத்தகங்களுக்கு 20 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. முதல் புத்தக விற்பனையை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தொடக்கி வைக்க, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சி.அய்யனார், அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆ.ஈசுவரன் ஆகியோர் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். இதில் தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பின்னல் புத்தகாலய பொறுப்பாளர் பா.சௌந்தரபாண்டியன், நிர்வாகிகள் என்.ராமசாமி, வேலா இளங்கோ, சம்பத், தங்கராஜ், பழனிவேல்சாமி, கவிஞர் துருவன்பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.சிறப்புக் கண்காட்சி நடைபெற்ற ஒரே நாளில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை ஆனது. புதிய வாசகர்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர் என்று பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் தெரிவித்தார்.