கோவை, ஏப்.11- நான்கு மாதமாக ஊதியம் தராமல் இழுத்தடிப்பதை கண்டித்து வியாழனன்று கோவையில் சின்னதடாகம் பகுதியில் நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய பகுதியில் சின்னதடாகம் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் செங்கல் சூளை மட்டுமே வேலைவாய்ப்பு அளித்து வரும் பகுதியாக உள்ளது. தற்போது, ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால் கட்டுமான பணிகள் முழுமையாக முடங்கியுள்ளதால் கூலி வேலை ஏதுமற்றுஇப்பகுதியினர் உள்ளனர். குறைந்தபட்சமாக நூறுநாள் வேலைத்திட்டத்தில் கிடைக்கும் கூலியை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சின்னத்தடாகம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் உடனடியாக ஊதியத்தை தர வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஊதியத்தைஇழுத்தடித்து வரும் ஊராட்சி மன்றத்தின் நடவடிக்கையை கண்டித்து வியாழனன்று இத்திட்டத்தில் பணியாற்றியவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு உறுப்பினர் ஆர். கேசவமணி, திமுக ஊராட்சி செயலாளர் வே.சூரியன்தம்பி ஆகியோர் தலைமையேற்றனர். இதனையடுத்து தொழிலாளர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள அனைத்து ஊதிய தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில்ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.