ஈரோடு, மே 27-அரசு பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தினர் மூன்றாவது நாளானதிங்களன்று ஈரோடு மாவட்டத்தில் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.அரசுப் பள்ளிகள் தேசத்தின் அடிப்படை சொத்து, பொதுக் கல்வியை வலுப்படுத்த அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து கடந்த 25ஆம் தேதி (சனிக்கிழமை) சைக்கிள் பிரச்சாரப் பயணம் தொடங்கியது. கோவையில் இஸ்ரோ முன்னாள்விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்த சைக்கிள் பிரச்சாரப் பயணக்குழுவுக்கு மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் காவியா ஆகியோர் தலைமை ஏற்றனர். இப்பயணக் குழுவினர் இரண்டாம் நாள் திருப்பூர் மாவட்டத்தில் தங்கள்பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டனர். மூன்றாவது நாளாக சைக்கிள் பிரச்சாரப் பயணம் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாலிபர் சங்கத்தின்முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.பழனிச்சாமி துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ரகுராமன், வாலிபர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர்விஸ்வநாதன் மற்றும் பொருளாளர் ஸ்டாலின், மாதர் சங்கத் தலைவர் கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிரச்சார பயணம் பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோயில், நசியனூர், மாணிக்கம்பாளையம், அம்பேத்கர் நகர், சம்பத் நகர், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பயணக்குழுவினரை அனைத்துப் பகுதிகளிலும் பெருந்திரளாக மக்கள் கூடி வரவேற்பளித்தனர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.மணிபாரதி, அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார், சிஐடியுதுணைத்தலைவர் பி.சுந்தரராஜன், மாதர் சங்கத்தின் மாவட்டதலைவர் லலிதா ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் பயணக் குழுவிற்கு ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டது.