குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்திலும், அரசு கலைக் கல்லூரியிலும், பி.எஸ்.ஜி கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மோடி தலைமையிலான பாஜக அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தில்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
அதே போல், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை வந்துள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், இச்சட்டத்தை ரத்து செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30 மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அரசு கலைக் கல்லூரி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ”குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம்”, ”ஜனநாயகம் கொடுத்த உரிமையை பரிக்காதே”, ”காலை நக்கி பிழைப்பதற்கு நாங்கள் என்ன சாவர்கரா?” போன்ற பதாகைகளை ஏந்தியும், இச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.