tamilnadu

உடுமலை மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

 பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

உடுமலை, மே 10-உடுமலையில் பெய்த கனமழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வியாழனன்று நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் வியாழனன்று அதிகாலையில் சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இதைத் தொடர்ந்து வெய்யிலின் தாக்கம் குறைந்து நகரில் பகலில் குளிர்க் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலை நகரைப் போலவே அருகில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் மழை பெய்தது.இந்நிலையில் உடுமலை அருகே சுற்றுலாத் தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகின்றனர். இச்சூழலில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழனன்று அதிகாலை பெய்த கன மழையால் பஞ்சலிங்கம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்கம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆசிரியையிடம் நகை கொள்ளை

திருப்பூர், மே 10-திருப்பூரில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் சகுந்தலா (50). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், வியாழனன்று மாலை ரயில் மூலம் திருப்பூருக்கு வந்தார். பின்னர் காட்டன் மில் ரோடு பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு புறப்பட்டார்.இதற்காக புஷ்பா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி, புதிய பேருந்து நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து மகள் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றதும் தான் வைத்திருந்த துணிப்பையை எடுத்து பார்த்தார். அதில் இருந்த பணப்பையை காணவில்லை. அதில் 2 பவுன் நகை, செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வைத்திருந்தார். அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சகுந்தலா அளித்த புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.