திருப்பூர், ஏப். 17 –இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதி கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்குச் சரிவை சந்தித்திருக்கிறது. ஆனால் புள்ளி விபர மாய்மாலத்தைக் காட்டி ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ) கூறியுள்ளது.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்தஆடைகள் அமெரிக்க டாலர் மதிப்பில்தான் கணக்கிடப்படுகின்றன. அதன்படி மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது 2014–15 நிதியாண்டில் அகில இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதி 1683 கோடி டாலர்கள் ஆகும். ஐந்தாண்டுகள் ஆன நிலையில் 2018–19 நிதியாண்டில் இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதி 1613 கோடியே 70 லட்சம் டாலர்கள் ஆகும். ஐந்தாண்டு காலத்தை ஒப்பிடும்போது ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 4.12 சதவிகிதம் குறைந்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த ஏற்றுமதி அளவை விட தற்போது சுமார் 70 கோடி டாலர் குறைந்திருக்கிறது.குறிப்பாக பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் இரண்டுக்கும் பிறகு இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதி மிகமோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் 2017–18ஆம் நிதியாண்டில் ஆயத்தஆடை ஏற்றுமதி 1671 கோடியே 47 லட்சம் டாலர்களாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018–19 நிதியாண்டில் மோசத்தில் இருந்து படுமோசமான நிலைக்கு, 57 கோடியே 77 லட்சம் டாலர் ஏற்றுமதி குறைந்துவிட்டது. அதாவது கடந்த ஆண்டைவிட ஏறத்தாழ 4ஆயிரத்து 10 கோடி ரூபாய் அளவு சரிந்துவிட்டது.
டாலரில் குறைவு; ரூபாயில் அதிகம்
எனினும் ஏற்றுமதியை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த ஆண்டைவிட 4.7 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக காட்டுகிறது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டதால்தான் இந்நிலை. இந்த சூழ்நிலையில்தான் திருப்பூர் ஆயத்தஆடை ஏற்றுமதி 2018-19 நிதியாண்டில் 26 ஆயிரம் கோடியாக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு 24 ஆயிரம் கோடி என்பதில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்திருப்பதாகக் காட்டுகிறது. கடந்த ஆண்டைவிட ஏற்றுமதி 8.3 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஏற்றுமதியாளர் சங்கம் கூறியுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் எண்ணிக்கை அடிப்படையிலோ, ஆடையின் மதிப்பு அடிப்படையிலோ உண்மையான அதிகரிப்பு ஏற்படவில்லை. மாறாக டாலருக்கும், ரூபாய்க்குமான ஏற்ற இறக்கத்தின் விளைவாகத்தான் புள்ளிவிபர அடிப்படையில் இந்த அதிகரிப்பு காட்டப்படுகிறது. உண்மையில் சொல்லப் போனால், அமெரிக்க டாலரைப் பெறுவதற்கு வழக்கத்தைவிட கூடுதலான ரூபாயை கொடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.இந்த லட்சணத்தில் டாலர் அடிப்படையிலான புள்ளிவிபரத்தை மறைத்துவிட்டு, ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஏமாற்றுத்தனமாக அறிக்கை விட்டுள்ளது. இது அப்பாவிகளை ஏமாற்றுவதற்குப் பயன்படலாம். ஏற்றுமதி தொழிலில் இருக்கக்கூடிய உற்பத்தியாளர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை என்ற உண்மை தெரியும்.
ஏன் இந்த தோற்றம்?
குறிப்பாக நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்கச் சந்தையை நிலைப்படுத்துவதற்காக அந்நாட்டு அதிபர் டிரம்ப் - சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் கடுமையான வரி விதிப்புக் கொள்கை காரணமாகத்தான் டாலர் மதிப்பு அதிகரித்தது. நமக்கு நெருக்கடி கொடுத்து அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதனால் நமக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்பையே புறக்கணித்துவிட்டு, ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக இங்குள்ள ஏற்றுமதியாளர் சங்கம் கூறுவது குறுகிய சுயநலம் சார்ந்த ஏமாற்றுத்தனமாகும்.
யாருக்காக இடைச்செருகல்?
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருப்பூர் ஏற்றுமதி வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாக உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்தையும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் வெளியிட்டுள்ளார். அத்துடன் அரசு சலுகை அளிப்பதுடன், “நிலையான ஆட்சியும் அமைந்தால்” வரக்கூடிய ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடியாக ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் விஷமத்தனமான ஒரு இடைச்செருகலை செய்திருப்பது யாரை ஏமாற்றுவதற்கோ?இந்த அறிக்கையில் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்திருப்பதாக காட்டுவதும், நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற கருத்தை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சேர்த்திருப்பதும் இந்த சங்கம் அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக 18ஆம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், மோடி ஆட்சியில் சிரமத்தைக் கடந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஒரு போலியான தோற்றத்தைக் காட்டும் இழிவாக முயற்சியை ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் செய்திருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
(ந.நி)