சோவியத் இலக்கியங்களை வாசித்தவர்கள் மாக்சிம் கார்க்கியைப் பற்றித் தெரியாமல் இருக்க மாட்டார்கள். பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட உலகப்புகழ் பெற்ற ‘தாய்’ நாவலை எழுதியவர். தனது இளம் வயதில் ருசியா முழவதும் நடந்தே பயணம் செய்தவர். மாக்சிம் கார்க்கி வாழ்ந்த காலத்தில் பல கல்வி அமைப்புக்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அவரை உரை நிகழ்த்த அழைத்திருக் கிறார்கள். ஒரு முறை மாக்சிம் கார்க்கியியை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் பேச மாணவர் பேரவை அழைத்தது. பாரீஸ் பல்கலைக் கழக சட்ட விதிகளின்படி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பேசலாம். அந்த விதிப் பிரகாரம், மாக்சிம் கார்க்கிக்கு “நிங்கள் படித்த கல்லூரி எது..? வாங்கியுள்ள பட்டங்கள் எவை.. எவை..?” என்கிற கேள்விக் கடிதத்தை அனுப்பினார்கள்.
மாக்சிம் கார்க்கி பல்கலைக் கழகத்தில் படித்தவர் அல்லர். “நான் உலகம் என்கிற பல்கலைக் கழகத்தில் மக்கள் என்கிற முடிவுறா இலக்கியத்தை கற்று வருகின்ற மாணவன்” என்கிற வகையில் பதில் எழுதினார். இருந்தாலும் மாக்சிம் கார்க்கியை பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அனுமதி அளிக்கவில்லை. இதன் விளைவாகத்தான் “யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை மாக்சிம் கார்க்கி எழுதினார். இன்றைய நிலைமை என்ன தெரியுமா..? கார்க்கியை அன்று பேச அனுமதிக்காத பல்கலைக்கழகத்தில் கார்க்கி யின் படைப்புக்கள் இலக்கியத்திற்கான பாடப் புத்தகங்களாக இருக்கின்றன.
பள்ளி, கல்லூரி படிப்புக்களுக்கும் படைப்பாற்றலுக்கும் தொடர் பில்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதொரு பேருண்மை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டிலும் கல்லூரி வாசலில் காலெடுத்து வைக்காதோர் படைப்புக்கள் பல்கலைக் கழகத்தின் பாடநூல் அந்தஸ்தைப் பெற்றி ருக்கின்றன. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கி.ராஜநாராயணன், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், ஜெயகாந்தன் என்று அந்தப் பட்டியல் பெரியதாய் நீளும். அதுமட்டுமல்ல கல்லூரிக்குள் நுழையாத பாரதி, பாரதிதாசன், பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். பெயர்களிலும் பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன என்பதும் குறிக்கத் தகுந்த செய்தி ஆகும். அது மட்டுமல்ல.. சட்டமேதை என்று புகழப்பட்ட அம்பேத்கார் பெயரில் பல்கலைக் கழகம் அமைக்க மராட்டிய மாநிலத்தில் எதிர்ப்புக்கள் தோன்றின. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அவர் பெயரில் சட்டப் பல்கலைக் கழகம் உருவாக்கிய போது சின்ன முணுமுணுப்புக் கூட எழவில்லை என்பது நாடறிந்த நற்செய்தி. ஆம். எதிலும் எடுத்துக் காட்டாக திகழும் மாநிலம் தமிழ்நாடு என்பதை அம்பேத்கரின் பெயர் சூட்டும் விசயத்திலும் நிருபித்திருக்கின்றோம்.