tamilnadu

img

சிஐடியு சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரம்

திருப்பூர், நவ. 20– மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோதக் கொள்கை களை அம்பலப்படுத்தி சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ஆறு மையங்களில் இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. செவ்வாயன்று திருப்பூர் வடக்குப் பகுதி, தெற்குப் பகுதி, அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், பல்லடம் ஆகிய ஆறு மையங்களில் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையை பறிக்கக் கூடாது, பொருளாதார நெருக்கடியில் வேலையிழக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது, நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  இந்த பிரச்சார இயக்கத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் மாவட்ட நிர்வாகிகள் சி.மூர்த்தி, பி.பாலன், செல்லதுரை, என்.சுப்பிரமணியம், ஜெ.கந்தசாமி, அன்பு, ப.கு.சத்தியமூர்த்தி, பி.முத்து சாமி மற்றும் அ.ஈஸ்வரமூர்த்தி, சி.ஈஸ்வரமூர்த்தி, சங்கர்குமார், குபேந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர்.