கோவை, ஜூன் 2-அரசு மருத்துவமனையின் செவிலியர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார். வரதட்சனை கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டி உறவினர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் கலங்கல் சாலையில் உள்ள விவேகானந்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி முரளி சங்கர் (27) மற்றும் பாண்டி மீனா(24).இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில், பாண்டி மீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். முரளிசங்கர் மற்றும் அவரது பெற்றோர்கள் பாண்டி மீனாவிடம் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வா என அடிக்கடி நச்சரித்து வந்துள்ளனர். இதனால் கணவர் மற்றும் கணவரின் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பும்கூட பாண்டிமீனாவின் பெற்றோர்கள் நகைகளை விற்று மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தந்துள்ளனர். இந்நிலையில், சனியன்று இரவு பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, பாண்டி மீனாவின் பெற்றோருக்கு முரளி சங்கரின் வீட்டார், பாண்டி மீனாதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த பாண்டி மீனாவின் பெற்றோர் இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு வந்தனர். இதில், உயிரிழந்த தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், ஆகவே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, மீனாவின் பெற்றோர் கணவர் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனசூலூர் காவல் நிலையம் மற்றும் போத்தனூர் மகளிர் காவல் நிலையத்தில் மீனாவின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர், பாண்டி மீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் கணவர் முரளி சங்கர் மற்றும் அவரது தந்தை கணேஷ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாண்டிமீனாவின் மர்ம மரணத்தை தற்கொலை என ஜோடிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து முறையான விசாரணை வேண்டும். முரளிசங்கர் மற்றும்அவரது பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாண்டி மீனாவின் உறவினர்கள் கூறுகையில், நேற்று (சனிக்கிழமை) மீனா பேசுகையில் அண்ணனின் திருமண அழைப்பிதழை ஞாயிற்றுகிழமை கொண்டு வரவேண்டாம். நாங்கள் வெளியே போகிறோம். திங்கட்கிழமை கொண்டு வந்தால் போதும் என்று மதியம் எங்களுடன் போனில் பேசினார். அப்படியிருக்க எப்படி தற்கொலை செய்திருக்க முடியும். இவர்கள் திட்டமிட்டே எங்கள் மகளை கொலை செய்துள்ளார்கள். இவர்களின் குழந்தை எங்களிடம் அம்மாவை கட்டிவைத்தே அடித்தார்கள் என்றுஎங்களிடம் சொல்லியது. இதனாலேயே எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது. ஆகவே முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனஉறுதிபட தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெறும். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறையினர், செவிலியர் பாண்டிமீனா மரணம் தொடர்பான வழக்கை தற்கொலை வழக்கு என திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப்பதிய உள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து முரளிசங்கரை கைது செய்ய உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.