சிவகங்கை, ஜூன் 17- சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலில் மின் வாரிய நிர்வாகக் குறைபாடு காரணமாக மின் வாரிய கேங்மேன் வினோத்குமார் (36) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த வினோத்குமாருக்கு மின்வாரியம் ரூ.25 லட்சம் நிவாரண வழங்கவேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வினோத்குமார் குடும்பத்தினர் வெள்ளியன்று பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அவர்கள் மீண்டும் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் கரு ணாநிதி, மாநிலச்செயலாளர் உமாநாத், சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா, மாவட்டச் செயலாளர் கருணாநிதி, மாவட்டப் பொருளாளர் மோகனசுந்தரம், முருகானந்தம், டேவிட்செபஸ்தியான், கோட்டத் தலைவர் ரமேஷ்பாபு, அண்ணா துரை, மரியசெபஸ்டியான் ஆகியோரும் கலந்துகொண்டனர். இரண்டாம் கட்டமாக மின் வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை யில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கைகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என அளித்த உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.